தமிழகம் முழுவதும் சிஏஏக்கு எதிராக அனுமதியின்றி நடைபெற்று வரும் போராட்டங்களை முடிவுக்கு கொண்டு வரக் கோரிய வழக்கு குறித்து தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக சேலம் மாவட்டத்தில் நடைபெற்று வரும் தொடர் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரக் கோரி கண்ணன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடந்தார்.
அதில், சேலம் மாவட்டத்தில் பிப் 14-ம் தேதி முதல் நடைபெற்று வரும் தொடர் போராட்டத்தின் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுவதாகவும் இந்த போராட்டத்தில் 18 வயதுக்கு கீழ் உள்ள சிறுவர் சிறுமியர் பங்கேற்றிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் கிருஷ்ணன் ராமசாமி அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, சேலத்தை போல சென்னை மண்ணடியில் இரண்டு வாரத்திற்கும் மேலாக போராட்டம் நடைபெற்று வருவதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அனுமதியின்றி நடைபெற்று வரும் போராட்டங்கள் மீது காவல்துறை தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நீதிமன்ற உத்தரவிற்காக காவல்துறை ஏன் காத்திருக்க வேண்டும் என கேள்வி எழுப்பிய நீதிபதிகள் தமிழகம் முழுவதும் சிஏஏக்கு எதிராக அனுமதியின்றி நடைபெற்று வரும் போராட்டங்களை முடிவுக்கு கொண்டு வருவது குறித்து தமிழக அரசு மற்றும் டிஜிபி ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை மார்ச் 13-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
credit indianexpress.com