நடிகர் ரஜினிகாந்த் 1:, 12/03/2020 - தனியார் நட்சத்திர ஹோட்டலில் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த், கட்சிக்கு ஒரு தலைமையும், ஆட்சிக்கு ஒரு தலைமையும் இருக்க வேண்டும் என கூறினார். ஆட்சியில் இருக்கும் தலைமையை, கட்சி தலைமை வழி நடத்தும் எனவும் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய நடிகர் ரஜினிகாந்த், முதலமைச்சர் ஆக வேண்டும் என்ற எண்ணமோ, சட்டப்பேரவைக்கு செல்ல வேண்டும் என்ற எண்ணமோ கிடையாது எனக்கூறினார்.
மேலும் அசுர பலம் வாய்ந்த அதிமுக மற்றும் திமுக என்ற இரண்டு பெரும் ஜாம்பவான்களை எதிர்த்து போராட வேண்டியது உள்ளது எனவும், கருணாநிதியும், ஜெயலலிதாவும் மிகப்பெரிய ஆளுமைகள் என்றும் அவர்கள் இல்லாதது தற்போது வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் ரஜினிகாந்த் கூறினார். மேலும் 2021ம் ஆண்டில் நடைபெற இருக்கும் தேர்தலில் தமிழக மக்கள் அற்புதத்தை நிகழ்த்த காத்துக்கொண்டிருக்கின்றனர் என்றும் தெரிவித்தார். மேலும் அரசியல் மாற்றம், மற்றும் ஆட்சி மாற்றத்திற்கான எழுச்சி மக்களிடம் தெரிந்தால் தான், நான் அரசியலுக்கு வருவேன் என்று தெரிவித்தார். அரசியல் மாற்றமும், ஆட்சி மாற்றமும் இப்பொழுது ஏற்படவில்லை என்றால் எப்போதும் நடக்காது என்று கூறினார்.
நடிகர் ரஜினிகாந்த் 2,
ஜெ. மறைவுக்கு பிறகு ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்பவே அரசியலுக்கு வருவதாக கூறினேன்
அனைத்து சர்ச்சைகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கவே இந்த செய்தியாளர் சந்திப்பு
நான் முதலமைச்சர் பதவியை நினைத்துப் பார்த்ததே இல்லை
அரசியலுக்கான ரஜினி அறிவித்த 3 திட்டங்கள்:
2017 டிசம்பர் மாதம் 31ம் தேதி நான் அரசியலுக்கு வருவேன் என்று முதலில் கூறியபோது, இங்கு சிஸ்டம் சரியில்லை முதலில் அதை சரி செய்ய வேண்டும், வெறும் ஆட்சி மாற்றம் மட்டும் போதாது. இங்கு அரசியல் நடத்தப்படும் முறையிலும் மாற்றம் கொண்டு வரவேண்டும். அப்போது தான் ஒரு நேர்மையான, வெளிப்படையான, ஊழலற்ற, ஜாதி, மத சார்பற்ற ஆட்சியை தர முடியும். அரசியல் மாற்றம் இல்லாத ஆட்சி மாற்றம் என்பது மீன் குழம்பு வைத்த பாத்திரத்தை கழுவாமல் அதிலேயே சர்க்கரை பொங்கல் செய்வது போன்றது. ஆக இந்த அரசியல் மாற்றத்துக்காக நான் சில திட்டங்களை வைத்திருக்கிறேன்.
அதில் முக்கியமான மூன்று திட்டங்களில் ஒன்று, கட்சி பதவி தொடர்பானது.
திட்டம்1:
‘தேர்தல் நேரத்தில் மட்டுமே பயன்படுத்தப்படும் கட்சிப்பதவி’
பெரிய அரசியல் கட்சிகளில் மாநில நிர்வாகிகளில் துவங்கி, ஊராட்சிகள் வரை கிட்டத்தட்ட 50,000க்கும் மேற்பட்ட பதவிகள் இருக்கின்றன. இந்த பதவியிலிருப்போரின் குடும்பத்தினர், உறவினர், நண்பர்கள் என்று ஒரு பதவிக்கு சராசரியாக 50 பேர் என்று எடுத்துக்கொண்டாலும் அவர்களின் எண்ணிக்கை 25 லட்சமாக இருக்கும். இவர்கள் அனைவரையும் திருப்திப்படுத்த வேண்டிய கட்டாயம் ஆளும் கட்சியினருக்கு ஏற்படுவதால் பெரியளவில் ஊழல் நடைபெற வாய்ப்புகள் இருக்கின்றன. கட்சி பொறுப்புகளில் இருப்பவர்கள் தேர்தல் நேரத்தில் வாக்குகளை பெற்று தர கட்சிக்கு பெரியளவில் உதவுவார்களே தவிர தேர்தலுக்கு பிறகு இவர்களால் அரசுக்கும், மக்களுக்கும் தொந்தரவு தான் அதிகம். ஆகவே தேர்தல் முடிந்தவுடன் கட்சிக்கு தேவைப்படும் அத்தியாவசியமான பதவிகளை மட்டும் வைத்துக்கொண்டு தேவையற்ற மற்ற பதவிகளை நீக்க வேண்டும். இது தான் என்னுடைய முதல் திட்டம்.
திட்டம் 2:
'இளைஞர்களுக்கு, புதியவர்களுக்கு வாய்ப்பு’
பொதுவாகவே இந்தியாவில் சட்ட மன்றங்களிலும், பாராளுமன்றத்திலும் 50, 55 வயதுக்கு மேற்பட்டவர்கள் தான் பெரும்பான்மை உறுப்பினர்களாக இருக்கின்றனர். அந்த வயதுக்கு கீழே உள்ளவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். ஒரு இளைஞர் அரசியலில் பிரகாசிக்க வேண்டுமென்றால் அவர் ஒரு எம்.பி மகனாகவோ எம்.எல்.ஏ மகனாகவோ, பணக்காரராகவோ இருக்க வேண்டும் என்கிற நிலை மாற வேண்டும். நல்லவர்கள், படித்தவர்கள், இளைஞர்கள் அரசியல் ஒரு சாக்கடை என்று ஒதுங்கிவிடாமல், அரசியலில் ஈடுபட முன்வர வேண்டும். குறிப்பாக இளைஞர்களுக்கு அதிகமான வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும்.
எனது கட்சியில் 50 வயதுக்கு கீழே உள்ளவர்கள், ஓரளவு படித்தவர்கள், நேர்மையான தொழில் செய்பவர்கள் அவர்கள் வாழும் பகுதியில் கண்ணியமானவர் என பெயரெடுத்தவர்களை தேர்வு செய்து 60 முதல் 65% அவர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பளித்து மீதியுள்ள 35-40% வேறு கட்சிகளில் வாய்ப்பு கிடைக்காத நல்லவர்கள், ஓய்வு பெற்ற நீதிபதிகள், ஐஏஎஸ், ஐபிஎஸ் இவர்கள் விருப்பப்பட்டு இயக்கத்தில் சேர விரும்பினால், அவர்களுக்கு வாய்ப்பளித்து சட்டமன்றத்திற்கு அனுப்பி அதிகாரத்தை கையில் கொள்ளும்படி செய்ய வேண்டும். அதற்கு நான் பக்கபலமாக இருக்க வேண்டும், இந்த நோக்கத்தை அடைவதற்கு நான் கடந்த 45 ஆண்டுகளாக திரையுலகில் ஈட்டிய புகழ், தமிழ் மக்கள் என் மீது செலுத்திவரும் பேரன்பு, அவர்களுக்கு என் மேல் இருக்கும் நம்பிக்கை அனைத்தும் உதவுமென நம்புகிறேன். இது எனது 2வது திட்டம்.
திட்டம் 3:
'கட்சிக்கு ஒரு தலைமை, ஆட்சிக்கு ஒரு தலைமை'
என்னுடைய 3வது திட்டம் கட்சித்தலைமையையும், ஆட்சித்தலைமையும் தனித்தனியாக பிரிப்பது. கட்சியை நடத்தும் தலைவர் வேறு, ஆட்சியை நடத்தும் தலைவர் வேறு. இந்த இரண்டையும் ஒன்றாகவே இணைத்துப் பார்த்து பழகிவிட்ட தமிழக அரசியலில் ஒரு மாற்று அரசியலை கொண்டு வர வேண்டியது அவசியம் என கருதுகிறேன். கட்சிக்கும், ஆட்சிக்கும் ஒரே நபரின் தலைமை எனும்பட்சத்தில், தேர்தலில் ஜெயித்து ஆட்சி அதிகாரத்துக்கு வருபவரிம் 5 வருட ஆட்சியில் என்ன தப்பு நடந்தாலும் மக்களோ, கட்சி பிரமுகர்களோ ஆட்சியாளரை தட்டிக்கேட்க முடியாது. அவரை பதவியிலிருந்து கீழே இறக்கவும் முடியாது. இதையும் மீறி கட்சியில் இருப்பவர்கள் தட்டிக்கேட்டால் அவர்களை பதவியில் இருந்து நீக்கிவிடுவர். இந்நிலை மாற கட்சித் தலைமை மிகவும் வலிமையாக இருந்தால் தான் ஆட்சியில் இருப்பவர்கள் தவறு செய்யும் போது தட்டிக் கேட்க முடியும். தப்பு செய்தவர்களை தூக்கி எறியவும் முடியும். மேலும் மக்களுக்கு கட்சி கொடுத்த வாக்குறுதிகளை ஆட்சியாளர்கள் சரிவர செயல்படுத்தும்படி பார்த்துக்கொள்ளும். கட்சி சார்ந்த விழாக்கள், கல்யாணம் போன்ற விழாக்களிலும் ஆட்சியாளர்கள் கலந்து கொள்ள வேண்டியதில்லை.
ஆட்சி நிர்வாகத்தில் அவர்களின் முழுக்கவனமும் இருப்பதற்கு இது உதவும். ஆட்சி சிறப்பாக நடைபெற மக்கள் வளர்ச்சிப் பணியில் அனுபவம் வாய்ந்த பல்வேறுதுறைகளை சார்ந்த வல்லுநர்களை தேர்ந்தெடுத்து ஒரு ஆலோசனை குழுவை உருவாக்கி அவர்கள் பரிந்துரைக்கும் ஆலோசனைகளை, அரசின் மூலம் செயல்படுத்துவதை கட்சி தலைமை உறுதி செய்யும். இதுவே எனது 3வது திட்டம்.
தலைவரின் சொல்லை கேட்பவன் தான் சிறந்த தொண்டன்
10 ஆண்டுகளாக ஆட்சியில் இல்லாத ஒரு கட்சி, அசுர பலத்துடன் உள்ளது; தனது ஆளுமையை நிரூபிக்க வேண்டியுள்ளது
அரசு கஜானாவையே தனது கைவசம் வைத்துள்ளது மற்றொரு கட்சி
மாபெரும் இந்த இரண்டு கட்சிகளையும் சினிமா புகழ் கொண்ட நான் எதிர்கொள்ள வேண்டும்
தமிழகத்திற்காக, தமிழக மக்களுக்காக அரசியல் புரட்சி வெடிக்க வேண்டும்
அற்புதத்தை நிகழ்த்த தமிழக மக்கள் தயாராக இருக்கின்றனர்
அரசியல் மாற்றம், ஆட்சி மாற்றம். இப்போது வரவில்லை என்றால் எப்போதும் இல்லை
வருங்கால முதல்வர் ரஜினி என்ற கோஷத்தை முதலில் நிறுத்துங்கள்
இது ஒரு நல்ல சந்தர்ப்பம் இப்போது எழுச்சி உருவாக வேண்டும்
செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த் -
அரசியல் மாற்றம், மற்றும் ஆட்சி மாற்றத்திற்கான எழுச்சி மக்களிடம் தெரிந்தால் தான், நான் அரசியலுக்கு வருவேன் என்று தெரிவித்தார். அரசியல் மாற்றமும், ஆட்சி மாற்றமும் இப்பொழுது ஏற்படவில்லை என்றால் எப்போதும் நடக்காது என்று கூறினார்.
credit ns7.tv