வெள்ளி, 3 ஏப்ரல், 2020

மரணத்திலும் இதயங்களை வென்ற பெல்ஜியம் மூதாட்டி!


Image
உலகின் 205 நாடுகள்/பிரதேசங்களில் பரவியிருக்கும் கொரோனா வைரஸ் தொற்று இன்று மனித குலத்திற்கே அச்சுறுத்தலாக மாறியுள்ளது. சீனாவிருந்து பரவத்தொடங்கிய இந்த வைரஸ் வெறும் இரண்டே மாதங்களில் சுமார் 50 ஆயிரம் உயிர்களை குடித்துள்ளது. உலகம் முழுவதும் சுமார் 9.40 லட்சம் பேர் இத்தொற்றால் பாதிப்படைந்துள்ளனர்.
முதலில் சீனாவில் வேகமாக பரவிய இந்த வைரஸ் தொற்று தற்போது ஐரோப்பிய நாடுகளில் வேகமாக பரவி வருவதுடன் ஏராளமான உயிர்களையும் காவு வாங்கி வருகிறது.
கொரோனா தொற்றால் அனுமதிக்கப்பட்டிருந்த பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த 90 வயது மூதாட்டி ஒருவர் கடந்த மாதம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஆனால் அவரின் மரணத்தை தாமாகவே முன்வந்து அவர் ஏற்றிருப்பது தற்போது தெரியவந்துள்ளது. அதிலும் அவர் அச்சத்தினால் மரணத்தை ஏற்காமல் பிறருக்கு உதவும் வகையில் வழிவிட்டு மரணமடைந்தது, மனிதத்தன்மையின் மகத்துவத்தை நகம்கெல்லாம் உணர்த்தியுள்ளது.
பெல்ஜியத்தின் Flemish Brabant மாகாணத்தில் உள்ள Lubbeek நகரைச் சேர்ந்தவர் 90 வயதான Suzanne Hoylaerts எனும் மூதாட்டி. இவர் கடந்த சில தினங்களுக்கு முன்னதாக கோவிட்19 எனப்படும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.
இவர் உயிரிழக்கும் முன்னதாக அவருக்கு ஆக்ஸிஜன் செறிவு மிகவும் குறைவாக இருந்ததால், அவரின் உயிரை காப்பாற்றும் விதாமாக அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்க மருத்துவர்கள் முடிவெடுத்திருக்கின்றனர். எனினும் தனக்கு இது தேவையில்லை என்றும் உயிருக்காக போராடும் இளைஞர்களுக்கு செயற்கை சுவாசக் கருவியை பயன்படுத்திக்கொள்ளுங்கள், என்னுடைய வாழ்க்கையை நான் வாழ்ந்துவிட்டேன் என தெரிவித்துள்ளார்.
மூதாட்டி Suzanne-ன் மறைவு குறித்து அவரின் மகளிடம் கேட்ட போது என்னுடைய அம்மா புதிதாக எதுவும் செய்துவிடவில்லை இதுவே அவரின் இயல்பான குணம் என்றும், அவருடைய இறுதி சடங்கை கூட எங்களால் மேற்கொள்ள முடியவில்லை, அவரின் இறுதி சடங்கில் கூட எங்களால் கலந்துகொள்ள முடியாதது தான் எனக்கு வருத்தம் என அவர் தெரிவித்திருக்கிறார்.
உலகிற்கே புதிதான நோயாக அறிமுகமாகியுள்ள கொரோனா தொற்றுக்கு இதுவரை தடுப்பு மருத்து கண்டறியப்படாத நிலையில் மிகவும் அதிக எண்ணிக்கையிலானவர்கள் இந்த நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு சிகிச்சை அளிக்க கூட தற்போது மருத்துவ உலகம் போராடிக்கொண்டிருக்கிறது, இந்த வேளையில் தான் உலக நாடுகளிலும் வெண்டிலேட்டர்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டிருக்கிறது. 
பிறருக்கு உதவும் வகையில் தன்னுயிர் நீத்த மூதாட்டி Suzanne மனித குலத்தின் தேவதையாகவே, மனிதத்தின் சிறந்த உதாரணமகாகவே வாழ்ந்து மறைந்துள்ளார்!