தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றும் அபாய பகுதியாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழக பொது சுகாதாரத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், கொரோனா வைரஸ் தமிழ்நாடு பொது சுகாதார சட்டம் 1939 பிரிவு 62-ன் கீழ் தொற்றுநோயாக அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொள்ளை நோய் சட்டம் 1897-ன் படி வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள், மருத்துவமனைகள், அடுக்குமாடி குடியிருப்புகள், பூங்காக்கள், வழிபாட்டு தலங்கள், அலுவலகங்கள் போன்ற இடங்களில் வருகை புரிபவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப தண்ணீர் குழாய்கள் மற்றும் கைகழுவும் சோப்புகள் வைக்கப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மாநிலம் முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் அவ்வப்போது கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்து நோய்தொற்று ஏற்படாத வகையில் பராமரிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. கொரோனா பற்றிய தகவலை ஆய்வகங்கள், மருத்துவமனைகள் எழுத்துப்பூர்வமாக தெரிவிக்க வேண்டும் என்றும், இதுபோன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள மறுக்கும் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழக அரசு எச்சரித்துள்ளது.
credit ns7.tv