நடிகர் ரஜினிகாந்த் தனது அரசியல் நிலைப்பாடு குறித்த முடிவை எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் தெரிவிப்பேன் என்று கூறிய நிலையில், ரஜினி ரசிகர்கள் சமூக ஊடகங்களில் ‘வா தலைவா வா’ என்று அவர் அரசியலுக்கு வரவேண்டும் என விருப்பம் தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில் சில நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்தும் வருகின்றனர்.
நடிகர் ரஜினிகாந்த் 2018ம் ஆண்டு தான் அரசியலுக்கு வருவது உறுதி என்று அவருடைய ரசிகர்களின் நீண்ட கால எதிர்பார்ப்பை நிறைவேற்றும் உறுதி மொழியை அளித்தார். அதன் பிறகு ரஜினியின் எல்லா கருத்துகளும் ஊடகங்களில் பெரும் விவாதமாக மாறியது. மக்களவைத் தேர்தல் நோக்கம் அல்ல, சட்டமன்றத் தேர்தல்தான் நோக்கம், கட்சி தொடங்கி 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவேன் என்று கூறுனார். கோவிட் தொற்று பரவல் காரணமாக ரஜினி அரசியல் கட்சி தொடங்குவது தள்ளிப்போகிறது என்று கூறப்பட்டுவந்தது.
இந்த சூழலில்தான், ரஜினியின் உடல்நிலை குறித்தும் அவர் அரசியல் கட்சி தொடங்குவது கேள்விக்குறி என்றும் அவர் ரசிகர்களுக்கு கடிதம் எழுதியாக ஒரு அறிக்கை கடந்த மாதம் சமூக ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு மறுப்பு தெரிவித்து அறிகை வெளியிட்ட ரஜினி, அந்த கடிதம் தான் எழுதியது அல்ல. ஆனால், அதில் தன்னுடைய உடல்நிலை பற்றிய தகவலில் உண்மை உள்ளது என்று கூறினார். மேலும், ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்து முடிவை அறிவிப்பேன் என்று கூறினார்.
இதனைத் தொடர்ந்து, நடிகர் ரஜினிகாந்த், ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் ராகவேந்திரா மண்டபத்தில் ஆலோசனை நடத்தினார். ஆலோசனையில் சில மாவட்ட நிர்வாகிகளின் செயல்பாடுகள் திருப்தி அளிக்கவில்லை என்றும் அவர்களுக்கு எச்சரிக்கை அளிக்கப்பட்டும் மற்றிக்கொள்ளவில்லை என்றும் கூறியதாக தகவல் வெளியானது. 2 மணி நேரத்துக்கு மேல் நடந்த ஆலோசனைக் கூட்டத்துக்குப் பிறகு நடிகர் ரஜினிகாந்த் அவரது வீட்டுக்கு புறப்பட்டு சென்றார். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த், “நிர்வாகிகள் தான் என்ன முடிவு எடுத்தாலும் ஏற்றுக்கொள்வதாகவும் உடன் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். அதனால், நான் என்னுடைய முடிவை எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் தெரிவிப்பேன் என்று கூறியுள்ளேன்.” என்று கூறினார்.
ரஜினிகாட்ந்த்தின் இந்த அறிவிப்பு ரஜினி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பையும் ரஜினி விமர்சிக்கும் நெட்டிசன்கள் மத்தியில் கடும் விமர்சனத்தையும் பெற்றுள்ளது.
ரஜினி அரசியலுக்கு வரவில்லை என்று அறிக்கையாகக் கூட வெளியிட்டிருக்கலாம். ஆனால், ரஜினி நிர்வாகிகள் ஆலோசனை நடத்தியுள்ளார். அதனால், அவர் அரசியலுக்கு வருவார் என்று அவரது ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். ரஜினி ரசிகர்கள் ‘வா தலைவா வா’ என்று ட்வீட் செய்து அவர் அரசியலுக்கு வரவேண்டும் என்று விருப்பம் தெரிவித்துள்ளனர்.
அதே நேரத்தில், சமூக ஊடகங்களில் சில நெட்டிசன்களும் எதிர்க்கட்சி சமூக ஊடகப் பயனர்களும் ரஜினி தனது முடிவை எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் அறிவிப்பேன் என்று தெரிவித்திருப்பதை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். பாவம் ரசிகர்கள் எவ்வளவு காலமாக காத்திருப்பது என்று ரஜினியின் அறிவிப்பை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
இது குறித்து ரஜினி ரசிகர்கள் மற்றும் ரஜினியை விமர்சிக்கும் நெட்டிசன்களின் ட்விட்டர் பதிவுகளை இங்கே தொகுத்து கீழே தருகிறோம்.