Amil Bhatnagar
Farmers Protest More farmers joining from other states : டெல்லி எல்லையில் முகாம்கள் அமைத்து தொடர்ந்து ஐந்தாவது நாளாக போராட்டத்தில் இறங்கியுள்ளனர் விவசாயிகள். பல்வேறு விவசாய சங்கங்கள் தொடர்ந்து புதிதாக கொண்டு வரப்பட்ட வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி வருகின்றனர்.
எங்களின் ”மன் கி பாத்தை” பிரதமர் நரேந்திர மோடி கேட்க வேண்டும் என்றும் கூறிய அவர்கள், பஞ்சாப்பின் அண்டை மாநிலங்களான ஹரியானா, உ.பி மட்டும் அல்லாமல் கேரளா மற்றும் ம.பியில் இருந்தும் விவசாயிகள் இந்த போராட்டத்தில் பங்கேற்க உள்ளனர் என்று விவசாயிகள் கூறினார்கள். சிங்கு எல்லையில், செய்தியாளர்களை சந்தித்த விவசாயிகள் சங்க தலைவர்கள், அவர்களின் கோரிக்கைகள் நிறைவேறும் வகையில் டெல்லி எல்லையை முடக்க இருப்பதாக அறிவித்தனர்.
“நவம்பர் -டிசம்பர் மாதங்கள் விவசாயிகளுக்கு மிகவும் முக்கியமான மாதங்கள் என்று எங்களுக்கு தெரியும். நாங்கள் பலரும் எங்களின் நிலங்களை விட்டுவிட்டு போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளோம். முதல் நாளில் இருந்து எங்களின் கோரிக்கைகள் ஒன்றாகவே இருக்கிறது. அந்த அனைத்து சட்டங்களும் திரும்பப் பெறப்பட வேண்டும். இதில் பேச்சுவார்த்தைக்கு இடமே இல்லை. இந்த போராட்டம் விவசாயிகளால் நடத்தப்படுகிறது. எந்த மதத்தைக் காட்டிலும் இது பெரியது. இப்போது இந்த இயக்கம் பெரிதாகி வருகிறது. அஃபசு இதனை கேட்க வேண்டும்” என்று ராஷ்ட்ரிய கிஷான் மஸ்தூர் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஷிவ் குமார் கூறினார். ம.பி. விவசாயிகள் பிரதிநிதியாக இவர் இந்த போராட்டத்தில் பங்கேற்றுள்ளார்.
இந்த புதிய சட்டங்கள் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு கட்டுப்பாடற்ற சுதந்திரத்தை வழங்கும் என்று விவசாய சங்க தலைவர்கள் தெரிவித்தனர். இந்த புதிய சட்டங்கள் மொத்த விவசாய தொழில்முறை சார்ந்த கட்டமைப்பையே மாற்றிவிடும். ப்ளாக்மெய்லிங்கிற்கு அதிக வாய்ப்புகளை இது உருவாக்கித் தருகிறது. காவல்துறையின் தடுப்புகளை உடைத்தது உட்பட 31 வழக்குகள் விவசாயிகள் மீது பதியப்பட்டுள்ளன. இருப்பினும் நாங்கள் இங்கு போராடிக் கொண்டிருக்கின்றோம். சில முதன்மை தகவல் அறிக்கையில் கொலை முயற்சி என்று விவசாயிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. உண்மை என்னவென்றால் நாங்கள் இதனை நிறுத்தப்போவதில்லை என்று பாரதிய கிஸான் சங்கத்தின் ஹரியானா மாநில தலைவர் குர்நாம் சிங் கூறியுள்ளார்.
சௌதரி மஹேந்திர சிங் திக்கைத் லட்சக் கணக்கான விவசாயிகளை போராட்ட களத்திற்கு அழைத்து வந்த 32 வருடங்களுக்கு பிறகு நாங்கள் மீண்டும் ஒரு பெரிய விவசாயிகள் இயக்கத்தை பார்க்கின்றோம். அவர்கள் இந்த போராட்டம் இடைத்தரகர்களால் நடத்தப்படுகிறது என்று கூறுவார்கள். நீங்களே பாருங்கள் இவர்கள் விவசாயிகளா இல்லை இடைத்தரகர்களா என்று? . மோடிக்கும் திட்ட ஆணையத்திற்கும் மட்டும் தான் எல்லாம் தெரியும் விவசாயிகளுக்கு ஒன்றும் தெரியாது என்பார்கள். உண்மை என்னவென்றால் கிராமத்தில் உள்ள சிறிய குழந்தைகளுக்கு கூட தெரியும். அவர்கள் பஞ்சாப் விவசாயிகள் மட்டும் தான் இப்படி என்பார்கள். ஆனால் இன்று ம.பி., உத்திரகாண்ட் போன்ற பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் போராட வந்துள்ளனர். பஞ்சாப் தலைமை வகிக்கிறது. ஆனால் இது மெல்ல மெல்ல தேசிய இயக்கமாக மாறுகிறது என்று ஸ்வராஜ் இந்தியாவின் தேசிய தலைவர் யோகேந்திர யாதவ் கூறியுள்ளார்.
டெல்லி – தேசிய தலைநகர் பகுதிகளில் இருந்து 8 போக்குவரத்து சங்கங்களும் கூட்டாக இந்த போராட்டத்தில் கலந்துள்ளனர். அவர்கள் விவசாய சங்கங்களுக்கு அனுப்பிய கடிதத்தில், இன்னும் இரண்டு நாட்களில் மத்திய அரசு போராட்டக்காரர்களின் கோரிக்கையை நிறைவேற்றவில்லை என்றால் வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாக கூறியுள்ளனர்.
“ மத்திய அரசு கோரிக்கைகளை இரண்டு நாட்களில் நிறைவேற்றவில்லை என்றால் தலைநகரில் ஒரு ஆட்டோ, டாக்ஸி, தனியார் வாகனம் மற்றும் ட்ரெக்குகள் கூட ஓடாத நிலையை உறுதி செய்வோம். நாம் அனைவரும் விவசாயிகளுக்கு கடன்பட்டுள்ளோம். ஆட்டோ சங்க பிரதிநிதிகளும் எங்களுடன் போராட்டத்தில் இணைவார்கள்” என்று அனைத்திந்திய சார்தி மற்றும் உரிமையாளர் சஙக்த்தின் பல்வந்த் சிங் புல்லர் கூறியுள்ளார்.
சிங்கு எல்லையில், குரு நானக் ஜெயந்தியின் காரணமாக அர்தாஸூடன் போராட்டம் துவங்கியது. நவம்பர் 26ம் தேதியில் இருந்து லாங்கர்கள் செயல்பட்டு வருவதால் திங்களன்று பிரசாதமும் இனிப்புகளும் பரிமாறி குருநானக்கை ஜெயந்தியை கடைபிடித்தனர்.
திங்கள் மாலையன்று கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக விளக்கேற்றி வழிபாடு நடத்தினார்கள் போராட்டக்காரர்கள். என் மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் லூதியானாவில் உள்ளனர். இந்த நல்ல நாளில் அவர்களுடன் நான் இல்லை. அவர்களும் நான் இல்லாமல் வருத்தம் அடைந்திருப்பார்கள். நான் அவர்களிம் ஒரு போராட்டத்தில் இருப்பதாக கூறினார்கள். நம்முடைய வாழ்விற்காக போராடுகின்றோம். எனக்காகவும் சேர்த்து அவர்களை இனிப்புகள் சாப்பிட கூறினேன். இந்த போராட்டத்திற்கு முறையான முடிவு கிடைக்கும் போது தான் நான் வீட்டிற்கு செல்வேன் என்று மஞ்சீத் சிங் கூறியுள்ளார்.
இந்நிலையில் நவம்பர் 27ம் தேதி அன்று போராட்டத்தில் ஈடுபட்டதற்காகவும், பெருந்தொற்று கால விதிமுறைகளை மீறியதற்காகவும் டெல்லி காவல்துறையினர் அடையாளம் தெரியாத நபர்கள் மீது எஃப்.ஐ.ஆர். பதிவு செய்துள்ளது. இது வரை கைது நடவடிக்கை ஏதும் இல்லை ஆனால் வீடியோ ஆதராரங்களை ஆய்வு செய்து வருகிறது காவல்துறை.
டெல்லி வெளிப்புற வடக்கு பகுதியின் டி.சி.பி. கௌரவ் ஷர்மா , எஸ்.எச்.ஒ புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்திருப்பதாக கூறினார். ஐ.பி.சி. 186, 353, 332, 147 (கலவரத்திற்கான தண்டனை), 148 (கலவரத்தை உண்டாக்குதல், ஆயுதங்கள் வைத்திருத்தல்), 149 (சட்டத்திற்கு புறம்பாக கூடுதல்), மற்றும் 34 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டதாக கூறியுள்ளார்.