வியாழன், 3 டிசம்பர், 2020

பாக்ய நகர் வாக்குறுதி: பின்னணியில் ஹைதராபாத் கோவில்

 

பாக்யலட்சுமி ஆலயம் எங்கு உள்ளது?

சார்மினாரின் வடகிழக்கு மினாரை ஒட்டி அமைந்துள்ளது இந்த லட்சுமி கோவில். மூங்கிலால் எழுப்பப்பட்டு தரகரத்தால் மேற்கூரை பாவப்பட்டிருக்கும். மினாரின் ஒரு சிறு பகுதி கோவிலின் பின்புற சுவராக உள்ளது. இந்த கோவில் எப்போது எப்படி உருவானது என்று தெரியவில்லை. ஆனால் 1960களில் இருந்து இருப்பதாக கூறுகின்றனர். செகந்த்ராபாத் எம்.பி. கிஷான் ரெட்டி இந்த கோவில் சார்மினார் கட்டுவதற்கு முன்பே , அதாவது 1591ம் ஆண்டுக்கு முன்பு இருந்தே அங்கே இருப்பதாக கூறுகிறார்.

 

இந்திய தொல்லியல் துறையின் படி, இந்த கோவில் சார்மினாரின் எல்லைக்குட்பட்ட பகுதியில் ஆக்கிரமிக்கப்பட்டு உருவாக்கப்பட்டது என்று கூறுகின்றனர். சார்மினாரின் சுவருக்கு அருகே வண்டிகள் நிறுத்தப்படுவதை தடுக்க ஒரு சிறிய பாதுகாப்பு தூண் உருவாக்கப்பட்டது. 1960களில் அந்த தூணுக்கு காவிநிறம் அடிக்கப்பட்டது. சில நாட்களுக்கு பிறகு அங்கு ஆரத்தி எல்லாம் எடுத்து பொதுமக்கள் வழிபாடு நடத்தினர். அந்த பாதுகாப்பு தூண் மீது ஒரு நாள் பேருந்து ஒன்று மோதி உடைந்து போன பிறகு அங்கு சிறிய மூங்கிலால் ஆன கோவில் ஒன்று கட்டப்பட்டு அம்மன் சிலை ஒன்று வைக்கப்பட்டது.

“2013ம் ஆண்டு வரை ஒவ்வொரு ஆண்டும் கோவில் திருவிழாவின் போது ஒரு அடி, இரண்டு அடி என்று கூடிக் கொண்டே போனது கோவிலின் சுற்றளவு. பின்பு ஆந்திர உயர் நீதிமன்றம் அந்த கோவிலின் விரிவாக்கத்தை கட்டுப்படுத்த 2013ம் ஆண்டு ஆந்திரா காவல்துறைக்கு உத்தரவு பிறப்பித்தது” என்று முகமது சபீர் அலி, தெலுங்கானா சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் கூறினார்.

சார்மினாரை சுற்றி இருக்கும் இந்து வர்த்தகர்கள் தினமும் இந்த கோவிலில் வந்து தரிசனம் மேற்கொள்கின்றனர். குறிப்பாக தீபாவளி சமயத்தின் போது பெரிய வரிசையில் நின்று லட்சுமியை தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர்.

இது ஏன் இப்போது செய்தியானது?

பாஜக தலைவர்கள் தேர்தல் பிரச்சாரத்திற்கு வரும் போது இந்த கோவிலுக்கு வருகை புரிவது மற்றும் இந்த கோவில் பெயர் பாக்யநகருடன் இணைவது தான் காரணம்.

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால் நவம்பர் 18ம் தேதி மாநில தேர்தல் ஆணையம் வழிகாட்டுதலின் படி தெலுங்கானா அரசு மக்களுக்கு வெள்ள நிவாரண உதவிகளை தருவதை நிறுத்தியது. ஆளும் டி.ஆர்.எஸ். கட்சி, மாநில தேர்தல் ஆணையத்திற்கு, நிவாரண உதவிகள் தருவதற்கு எதிராக புகார் அளித்த பாஜக மாநில தலைவர் பண்டி சஞ்சய் குமார் மீது குற்றம் சுமத்தினார். இந்த குற்றச்சாட்டை மறுத்த அவர் டி.ஆர்.எஸ் தலைவர்களுக்கு சவால் விடுத்து பாக்கியலட்சுமி கோவிலில் சத்தியம் செய்வதாக கூறினார். நவம்பர் 20ம் தேதி அன்று அந்த கோவிலுக்கு சென்ற அவர், மாநில தேர்தல் ஆணையத்திற்கு தான் கடிதம் எழுதவில்லை என்று சத்தியம் செய்தார்.

அன்றில் இருந்து பாஜக தலைவர்களில் சிலர் அடிக்கடி இந்த கோவிலுக்கு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். அமித் ஷாவும் அந்த கோவிலுக்கு சனிக்கிழமை சென்றுள்ளார். ஆனால் அவர் ஆசிர்வாதம் பெறவே கோவிலுக்கு சென்றேன். மற்றபடி இதில் வேறெந்த உள்நோக்கமும் இல்லை என்று அவர் கூறியுள்ளார்.

பக்தர்கள் இந்த கோவிலில் வணங்கினால் தங்களுக்கு செல்வம் பெருகும் என்று நம்புகின்றனர். மற்றொரு வகையில், இந்து அமைப்புகள் இந்த கோவிலை பாக்யநகருடன் இணைத்து பார்க்கின்றனர். பாஜக தலைவர்கள் பலரும் இந்த நகருக்கு முன்பு பாக்யநகர் என்ற பெயர் இருந்ததாகவும் முகமது கலி க்வதாப் ஷாவின் ஆட்சியின் போது இது ஐதராபாத் என்று மாற்றப்பட்டதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.

இதற்கு முன்பு இந்த பெயரால் சர்ச்சை ஏதும் உருவானதா?

சில வன்முறைகள் இதனால் இதற்கு முன்பு ஏற்பட்டுள்ளது. நவம்பர் 1979ம் ஆண்டு ஆயுதம் தாங்கிய சிலர் மெக்காவின் பெரிய மசூதியை கைப்பற்றினர். அப்போது எம்.ஐ.எம். பழைய ஐதராபாத் நகரில் கடை அடைப்பிற்கு அழைப்பு விடுத்தது. தீபாவளி நெருங்கி வரும் சமயம் என்பதால் கடைகளை திறந்து வைக்க அனுமதி அளிக்குமாறு எம்.ஐ.எம்.மிடம் வர்த்தகர்கள் கேட்டுக் கொண்டனர். ஆனால் இந்த விவகாரம் பெரிதாகி கலவரத்தில் முடிய பாக்யலட்சுமி கோவில் தாக்குதலுக்கு ஆளானது.

1983ம் ஆண்டு செப்டம்பரில் விநாயகர் சதுர்த்தியின் போது பேனர்கள் வைக்கப்பட, கோவிலின் விரிவாக்கம் தொடர்பாக இரு தரப்பிலும் சர்ச்சைகள் மூண்டது. அப்போது இந்த கோவிலும் அல்வின் மசூதியும் தாக்கப்பட்டது. நவம்பர் 2012ன் போது கோவில் நிர்வாகம் மூங்கில்களை நீக்கிவிட்டு கட்டிடமாக எழுப்ப முயற்சி செய்து அது பிரச்சனையில் முடிந்தது. இறுதியாக ஆந்திரா உயர் நீதிமன்றம் தலையிட்டு அந்த கோவிலின் விரிவாகத்திற்கும் புதிதாக கட்டுவதற்கும் தடை விதித்தது.