வரும் வெள்ளிக்கிழமை அதிகாலை கன்னியாகுமரி – பாம்பன் இடையே புரெவி புயல் கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
எங்கு கனமழை பெய்யும்?
தென்மேற்கு வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த நிவர் புயல் தமிழகத்திற்கும் புதுச்சேரிக்கும் இடையே கரையைக் கடந்த 7 நாட்களுக்குப் பிறகு, புரெவி (மாலத்தீவால் பெயரிடப்பட்டது ) என்ற மற்றொரு சூறாவளி, இந்த வார இறுதியில் (வரும் வெள்ளிக்கிழமை) கன்னியாகுமரி – பாம்பன் இடையே புயல் கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புரெவி புயல் தற்போது இலங்கையின் திரிகோண மலையிலிருந்து 200 கிலோமீட்டர் தென்கிழக்கிலும், பாம்பனிலிருந்து 420 கிலோமீட்டர் தொலைவிலும், கன்னியாகுமரிக்கு கிழக்கே 600 கிலோமீட்டர் தொலைவிலும் மையம் கொண்டுள்ளது.
கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, ராமநாதபுரம், சிவகங்கை போன்ற தென் தமிழக மாவட்டங்களிலும், திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, ஆலப்புழா ஆகிய தெற்கு கேரளா பகுதிகளில் கனமானது முதல் மிக கனமான மழை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
புரெவி சூறாவளி தமிழக தென் கடலோரத்தில் எப்போது புயலாக கடக்கும்?
இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ” புரெவி புயல் சின்னம் மேலும் தீவிரமடைந்து இன்று மாலை / இரவில் புயலாக மாறி திரிகோணமலைக்கு வடக்கே இலங்கை கடலோரத்தில் கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது மணிக்கு 80 – 90 கிலோ மீட்டர் முதல், 100 கிலோ மீட்டர் வரையிலான வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.
அதன் பிறகு மேற்கு – வடமேற்காக நகர்ந்து டிசம்பர் 3 ஆம் தேதி காலையில் கோமோரின் பகுதியை ஒட்டி மன்னார் வளைகுடா மற்றும் குமரிமுனை பகுதிக்குச் செல்லும் என எதிர்பார்க்கப் படுகிறது.
டிசம்பர் 3 ஆம் தேதி மதியம் பாம்பனுக்கு மிக அருகாமையில் மணிக்கு 70- 80 கிலோ மீட்டர் முதல் 90 கிலோ மீட்டர் வரையிலான வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். பிறகு அது மேற்கு – தென்மேற்காக நகர்ந்து, தமிழக தென் கடலோரத்தில் கன்னியாகுமரிக்கும் பாம்பனுக்கும் இடையில் டிசம்பர் 4 ஆம் தேதி அதிகாலையில் புயலாகக் கடக்கும். அப்போது மணிக்கு 70- 80 கிலோ மீட்டர் முதல் 90 கிலோ மீட்டர் வரையிலான வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்” என்று தெரிவித்தது.
புரெவி புயல் மற்றும் நிவர் புயல் எது வலுவானது?
தென்மேற்கு வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த நிவர் புயல், மிகக் கடுமையானது. புயல் கரையை கடந்த போது, மணிக்கு 120 முதல் 140 கிலோ மீட்டர் வேகத்தில் கடும் காற்று வீசியது.
நிவர் புயல் காரணமாக வங்காள விரிகுடாவின் தென்மேற்குப் பகுதியில் நிலையற்ற தன்மைகள் தொடர்கின்றன. இதனால் ஒட்டுமொத்த கடல் பகுதிகள் தற்போது சாதகமற்ற சூழலில் உள்ளது. இதன் காரணமாக புரெவி , புயலின் தீவிரத்தைத் தாண்டி வலுப்பெறாது என்பதற்கான அதிக வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
“நிவர் புயலால் கடலோரப் பகுதிகளில் காணப்பட்ட மேல்நோக்கிய நீரோட்டம் ( upwelling) காரணமாக, புரெவி சூறாவளி மட்டுப்படுத்தப்பட்ட தீவிரத்தை கொண்டிருக்கும்” என்று ஐஎம்டியின் அதிகாரி ஒருவர் கூறினார்.
கடல் பிராந்தியத்தில் தொடர்ச்சியாக இத்தகைய அமைப்புகள் உருவாகும்போது, முந்தைய வானிலை அமைப்பு, குளிர்ந்த ஆழ் கடல் நீர் கடல் மேற்பரப்புகளுக்கு தள்ளப்படும் செயல்முறைக்கு ( upwelling )வழிவகுக்கிறது.
கடல் பகுதிகளில் சூடான மேற்பரப்பு இல்லாத நிலையில், கடலில் நிலைக் கொண்டிருக்கும் எந்தவொரு சூறாவளியும், அதிதீவிரமடைவதற்கான போதுமான சக்தியைப் பெறாது.
எனவே ,தான் டிசம்பர் 5 ஆம் தேதி வரை புரெவி ஒரு சூறாவளி புயலாக ( 70- 80 கிலோ மீட்டர் முதல் 90 கிலோ மீட்டர் வரையிலான வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். ) இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் சுட்டிக்காட்டியுள்ளது.
கடல் பகுதி நிலவரம் :
வங்காள விரிகுடா மற்றும் இலங்கையின் கிழக்கு கடலோரப் பகுதிகளில் தென்மேற்குப் பகுதியில் கடும் சீற்றத்துடன், ராட்சத அலைகள் எழும். 3 ஆம் தேதி இரவு வரையில் அதே நிலை தொடர்ந்து, பிறகு படிப்படியாக சீராகும். இன்று (நவம்பர் 2) குமரிமுனைப் பகுதி, மன்னார் வளைகுடா பகுதி, தமிழகம் – கேரளத்தின் தென்பகுதி, இலங்கையின் மேற்கு கடலோரப் பகுதியில் கடும் சீற்றம் இருக்கும். 3 மற்றும் 4 ஆம் தேதிகளில் கடும் சீற்றத்துடன் ராட்சத அலைகள் வீசும். லட்சத்தீவுகள் – மாலத்தீவு பகுதியிலும் அரபி கடலின் தென்கிழக்குப் பகுதியிலும் 3 முதல் 5 ஆம் தேதி வரையில் கடலில் கடும் சீற்றம் காணப்படும்