வெள்ளி, 4 டிசம்பர், 2020

விவசாயிகளுடன் இன்றைய பேச்சுவார்த்தையும் தோல்வி; குறைந்தபட்ச ஆதரவு விலை தொடரும்

 புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரி தொழிற்சங்கத் தலைவர்கள் உறுதியாக இருந்ததால், மத்திய அரசுக்கும் விவசாயிகள் குழுவின் 35 பிரதிநிதிகளுக்கும் இடையே வியாழக்கிழமை நடைபெற்ற நான்காவது சுற்று பேச்சுவார்த்தை எந்தவொரு தீர்வையும் எட்டத் தவறியது. அதனால், அடுத்த ஆலோசனைக் கூட்டம் டிசம்பர் 5ம் தேதிக்கு திட்டமிடப்பட்டுள்ளது. குறைந்தபட்ச ஆதரவு விலை தொடப்படமாட்டாது என்று விவசாயிகளுக்கு உறுதியளித்த மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் விவசாயிகளின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவருமாறு கேட்டுக்கொண்டார்.

மத்திய அரசின் தலைமையிலான பேச்சுவார்த்தையில் மத்திய அமைச்சர் தோமரால் விவசாயிகளின் சந்தேகங்களுக்கு தீர்வு காணப்படுவதாக வேளாண் அமைச்சகம் ட்வீட் செய்துள்ளது.

இருப்பினும், விவசாயிகள் சங்கத் தலைவர்கள் அரசாங்கத்தின் நிலைப்பாட்டை நிராகரித்தனர். அவர்களில் சிலர் தீர்வு காணப்படாவிட்டால் மேலும் நடத்தப்படும் கூட்டங்களை புறக்கணிப்பதாக அச்சுறுத்தினர். புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய நாடாளுமன்றத்தின் சிறப்பு அமர்வுக்கான கோரிக்கையை விவசாயிகள் உறுதியாக வைத்தனர். மேலும், அவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் தேசிய தலைநகரின் பிற சாலைகளும் மறிக்கப்படும் என்று அச்சுறுத்தினர்.

இதனிடையே, டெல்லியின் எல்லைகளை சுற்றி விவசாயிகள் கூட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. காசியாபாத்தை டெல்லியுடன் இணைக்கும் இரண்டு தேசிய நெடுஞ்சாலைகளில் காவல்துறையினர் வழிகளை அடைத்துள்ளனர்.

பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங், இன்று உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து விவசாயிகளின் பிரச்சினையை விரைவில் தீர்க்குமாறு மத்திய அரசிடம் வேண்டுகோள் விடுத்தார். மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்தித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங், “விவசாயிகளுக்கும் மத்திய அரசுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது. அதில் நான் தீர்ப்பதற்கு எதுவும் இல்லை. உள்துறை அமைச்சருடனான எனது சந்திப்பில் எனது எதிர்ப்பை நான் மீண்டும் வலியுறுத்தினேன். இது எனது மாநிலத்தின் பொருளாதாரத்தையும் தேசத்தின் பாதுகாப்பையும் பாதிக்கும் என்பதால் இந்த பிரச்சினையை தீர்க்குமாறு கேட்டுக்கொண்டேன்” என்று கூறினார்.