நிதியமைச்சருமான பழனிவேல் தியாகராஜன் கார் மீது செருப்பு வீசப்பட்டது தொடர்பாக கண்டனம் தெரிவித்த துரைமுருகன் கூறுகையில் “ அராஜகத்தை பா.ஜ.க.வினர் கையிலெடுத்திருப்பது கேவலமான அரசியல்” என்று தெரிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீரில் உயிர் நீத்த மதுரை ராணுவ வீரர் லட்சுமணனின் உடலுக்கு அஞ்சலி செலுத்த சென்ற, திமுக மூத்தத் தலைவரும், நிதியமைச்சருமான பழனிவேல் தியாகராஜன் கார் மீது செருப்பு வீசப்பட்டது. இந்த சம்பவம் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக பாரதிய ஜனதா தொண்டர்கள் 5 பேர் கைதுசெய்யப்பட்டனர்.
இந்நிலையில் நள்ளிரவில் தமிழக பாஜக மதுரை மாவட்ட தலைவர் டாக்டர் சரவணன் நள்ளிரவில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜை சந்தித்து மனிப்பு கேட்டார். பாஜகவின் மதவெறுப்பு அரசியல் பிடிக்காததால் அங்கு தொடர விரும்பவில்லை எனவும் அறிவித்தார். “ நடந்த சம்பவத்தை நினைத்து தூக்கம் வரவில்லை; உடனடியாக அமைச்சர் வீட்டிற்கு வந்து மன்னிப்பு கேட்டேன்; இதுவும் எனக்கு ஒரு தாய் வீடுதான்” என்று அவர் பேட்டியளித்தார்.
இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக திமுக மூத்த தலைவர் துரைமுருகன் கூறுகையில் ” செருப்பு வீசுவது, சிலைகளை சேதப்படுத்துவது போன்ற அசிங்க அரசியல் தவிர வேறு எதுவும் பாஜகவுக்கு தெரியாது. பாஜகவினரின் அருவருக்கத்தக்க அரசியல் பண்பாடற்ற செயல்” என்று அவர் தெரிவித்துள்ளார்.
source https://tamil.indianexpress.com/tamilnadu/durai-murugan-slams-on-bjp-attack-against-ptr-palanivel-thiagarajan-493990/