
எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி, தமிழக மீனவர்கள் 10 பேரை இலங்கைக் கடற்படை இன்றும் கைது செய்துள்ளது.
நாகை மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள், படகு ஒன்றில் நேற்று மீன் பிடிக்கச் சென்றுள்ளனர். இலங்கையை ஒட்டிய பருத்திதுறை கடற்பரப்பில் எல்லைதாண்டி வந்து மீன்பிடித்ததாக கூறி, நாகை மீனவர்கள் 10 பேரையும் கைது செய்த இலங்கைக் கடற்படை, மீனவர்களின் விசைப்படகையும் கைப்பற்றியுள்ளது.
கைது செய்யப்பட்ட மீனவர்கள் அனைவரும் காங்கேசன் துறைமுகத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கு விசாரணை நடத்தப்பட்டு வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. எல்லை தாண்டிச் சென்று மீன் பிடித்ததாக நாகை மீனவர்கள் 10 பேரை இலங்கைக் கடற்படை நேற்று கைது செய்தது. இதற்கு மீனவர்கள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், மேலும், 10 மீனவர்களை இலங்கைக் கடற்படை கைது செய்துள்ளது. 2 நாளில் 20 மீனவர்கள் கைது செய்யப்பட்டதன் மூலம், இலங்கைச் சிறைகளில் உள்ள இந்திய மீனவர்களின் எண்ணிக்கை 109 ஆக அதிகரித்துள்ளது.