
சென்னை மெரினாவில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு ஆதரவாக பேசிய காவலர் மாயழகு மீது எடுக்கப்பட்டுள்ள துறை ரீதியான நடவடிக்கைக்கு பல்வேறு தரப்பிலும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகத்தில் மாபெரும் போராட்டம் கடந்த ஜனவரி மாதம் சென்னை மெரினாவில் நடைபெற்றது. இதில், இளைஞர்கள் உட்பட பல்லாயிரக்கணக்கானோர் திரளாக கலந்து கொண்டதால், போராட்டம் விஸ்வரூபம் எடுத்தது. போராட்டத்தின்போது பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த தமிழ்நாடு தமிழக ஆயுதப்படை காவலர் மாயழகு, இளைஞர்களின் நெறிபிறழாத எழுச்சியால் ஈர்க்கப்பட்டார். ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு ஆதரவாக காவலர் மெரினா கடற்கரையில் பேசினார். மாயழகின் ஆவேசமான பேச்சு, ஜல்லிக்கட்டு ஆதரவாளர்களிடையே எழுச்சியை ஏற்படுத்தியது.
காவலர் மாயழகின் இந்த பேச்சு, காவல் துறை வட்டாரத்தில் பரபரப்பை உருவாக்கியது. இதனால், அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படலாம் என்ற சூழல் ஏற்பட்டது. இருப்பினும், காவலர் மாயழகு மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட மாட்டாது என, மயிலாப்பூர் துணை ஆணையர் பாலகிருஷ்ணன் உள்ளிட்ட காவல்துறை உயர் அதிகாரிகள் லட்சக்கணக்கான மக்கள் முன்னிலையிலும், ஊடகங்கள் முன்னிலையிலும் வாக்குறுதி அளித்தனர்.
இருப்பினும், கடந்த ஜூன் மாதம் 13 ஆம் தேதி மாயழகுவிற்கு ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பேசியது குறித்து விளக்கம் கேட்டு காவல் துறையினர் நோட்டீஸ் அனுப்பினர். இதற்கு பல்வேறு தரப்பில் எதிர்ப்பு எழுந்ததால் வழக்கமான நடைமுறை என காவல் துறையினர் விளக்கம் அளித்தனர். இந்நிலையில்,10 மாதங்களுக்குப் பிறகு, கடந்த 13ஆம் தேதி 3-பி சார்ஜ் மற்றும் ஓராண்டுக்கு சம்பள உயர்வு ரத்து என, காவலர் மாயழகு மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனால், காவலர் மாயழகுவிற்கு ஊதிய உயர்வும், பதவி உயர்வும் கிடைக்காத சூழல் ஏற்பட்டுள்ளது.
இதற்கு பல்வேறு தரப்பிலும் கண்டனங்கள் எழுந்துள்ள நிலையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், காவலர் மாயழகு மீது துறை ரீதியான நடவடிக்கையும் எடுக்க மாட்டோம் என லட்சக்கணக்கான மக்கள் முன்னிலையில் அளித்த வாக்குறுதியை மயிலாப்பூர் துணை ஆணையர் பாலகிருஷ்ணன் காற்றில் பறக்கவிட்டுவிட்டதாக விமர்சித்துள்ளார். நடுக்குப்பம், அயோத்திக்குப்பம் மக்கள் மீது தாக்குதல் நடத்தியும், ஆபாசமாக பேசிய காவல்துறையினர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு விட்டதா? எனவும் சீமான் வினவியுள்ளார்.