தமிழகத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான புதிய பாடத்திட்டத்திற்கான வரைவை, தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்.
தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கான பாடத்திட்டத்தை மாற்றுவதற்கான கல்வியாளர் அனந்தகிருஷ்ணன் தலைமையிலான 10 பேர் குழுவை தமிழக அரசு அமைத்தது. இக்குழுவின் பரிந்துரையின்படி புதிய பாடத்திட்டத்திற்கான வரைவை இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்.
இந்த பாடத்திட்டத்திற்கான வரைவை பள்ளிக்கல்வித்துறை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த வரைவு தொடர்பாக மாணவர்கள், ஆசிரியர்கள், கல்வியாளர்கள், பெற்றோர்கள் ஆகியோர் தங்களது கருத்துகளை 15 நாட்களுக்குள் இணையதளத்தில் பதிவிடலாம் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அடுத்த ஆண்டு ஜனவரி மாத இறுதியில் இந்த வரைவில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு, இறுதி பாடத்திட்டம் வெளியிடப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
பின்னர் இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், எந்த பொதுத்தேர்வையும் மாணவர்கள் எதிர்கொள்ள ஏதுவாக இப்புதிய பாடத்திட்டம் இருக்கும் என தெரிவித்தார். மேலும், புதிய பாடத்திட்டத்திற்கேற்ப ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும் எனவும் குறிப்பிட்டார்.
source:NS7 tv