சனி, 4 நவம்பர், 2017

காவிரி நடுவர் மன்றத்தின் பதவிக்காலம் மேலும் 6 மாதம் நீட்டிப்பு! November 4, 2017

Image

காவிரி நதி நீர் பிரச்னையில் தீர்வு காண்பதற்காக அமைக்கப்பட்ட, காவிரி நடுவர் மன்றத்தின் பதவிக் காலத்தை, மேலும் 6 மாதங்களுக்கு மத்திய அரசு நீட்டித்துள்ளது. 

காவிரி நதி நீரைப் பங்கிட்டு கொள்வதில், தமிழகம் மற்றும் கர்நாடகா இடையே பிரச்னை ஏற்பட்டது. இதில் தீர்வு காண அமைக்கப்பட்ட காவிரி நடுவர் மன்றம் 2007, பிப்ரவரி 5-ம் தேதி தீர்ப்பு அளித்தது. 

எனினும், அத்தீர்ப்பை எதிர்த்து, இந்தப் பிரச்னையில் தொடர்புடைய தமிழகம், கர்நாடகா, கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய அரசுகள், உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு தற்போது நிலுவையில் உள்ளது. 

இந்த நிலையில், நதி நீர் பங்கீடு தொடர்பாக நடுவர் மன்றத்தின் இறுதி அறிக்கையை சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு அண்மையில் முடிவடைந்தது. அதையடுத்து, காவிரி நடுவர் மன்றத்தின் பதவிக்காலம், 2018, மே 2-ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக, மத்திய அரசு சார்பில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

தற்போது காவிரி நதிநீர் மன்றத்தின் இறுதி அறிக்கையை சமர்ப்பிக்க 2018 மே 2 வரை காலக்கெடு அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.