
மின் அளவீட்டுக்கருவி கொள்முதல் ஒப்பந்த முறைகேட்டிற்கு காரணம் யார்? என்பது குறித்து, தமிழக அரசு தெளிவுப்படுத்த வேண்டும் என்று, எதிர்க்கட்சித்தலைவர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிமுக ஆட்சியில் தமிழ்நாடு மின்சார உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்திற்கு 29 லட்சத்து 88 ஆயிரம் மின் அளவீட்டுக்கருவிகள் கொள்முதல் செய்வதில் நடந்துள்ள முறைகேடு அதிர்ச்சியளிப்பதாக கூறியுள்ளார்.
குறைந்த விலைக்கு வழங்க முன்வரும் நிறுவனத்துக்கு ஒப்பந்தம் கொடுக்க வேண்டும் என்ற டெண்டர் சட்டத்தின் அடிப்படை நோக்கத்தை மீறும் அளவிற்கு, இந்த டெண்டர் விஷயத்தில் அழுத்தம் கொடுத்தது யார்? என்றும் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
நஷ்டத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் மின் வாரியத்தை மேலும் நஷ்டமடைய செய்வதுடன், நுகர்வோர் பாதிப்படையும் வகையில், அதிக விலைக்கு கொள்முதல் செய்ய முன்வந்திருப்பதற்கும் அவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மின் அளவீட்டுக்கருவி வாங்குவதில், அதிக விலை கொடுப்பதன் மூலம் மின்துறை அமைச்சர், தமிழக நலனுக்காக செயல்படுகிறாரா? அல்லது தன் சொந்த நலனுக்காக பாடுபடுகிறாரா? என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாவும் ஸ்டாலின் வினா எழுப்பியுள்ளார்.
எனவே, 29 லட்சம் மின் அளவீட்டுக்கருவி கொள்முதலில் நடந்த குளறுபடிகள் குறித்து, தமிழ்நாடு மின்சார உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழக தலைவர் உடனடியாக விளக்கமளிக்க வேண்டும் என்றும் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.