செவ்வாய், 7 நவம்பர், 2017

இலங்கை அரசுக்கு தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம்! November 7, 2017

Image

இலங்கையில் அரசு நிறுவனங்களில் இருந்து, மலையகத் தமிழர்களின் தலைவர் சௌமியமூர்த்தி தொண்டமானின் பெயர் நீக்கப்பட்டதற்கு, தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். 

இதுகுறித்து, தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் திருநாவுக்கரசர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தொண்டமான் பெயர் நீக்கப்பட்டிருப்பது, அங்குள்ள 8 லட்சம் மலையகத் தமிழர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். தொண்டமான் பெயரை மீண்டும் சூட்டுவதற்கு, இலங்கை அரசை இந்திய அரசு நிர்பந்திக்க வேண்டும், எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். 

தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கை அரசின் இந்த நடவடிக்கை, தொண்டமானை அவமதிப்பது போல் உள்ளதாக கூறியுள்ளார். மலையகத் தமிழர்களின் அடையாளத்தை அழிக்கும் முயற்சி இது என விமர்சித்துள்ள விஜயகாந்த், அப்போதைய ஆட்சியாளர்களின் இதுபோன்ற நடவடிக்கை காரணமாகவே, அங்கு விடுதலைப் போராட்டம் வெடித்தது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கை ஆட்சியாளர்களின் இந்த நடவடிக்கை அதிர்ச்சி அளிப்பதாகவும், இதனை கடுமையாக கண்டிப்பதாகவும் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, அங்கு தமிழ் மக்கள் நடத்தி வரும் போராட்டம் வலுபெற வேண்டும் என கூறியுள்ள திருமாவளவன், இலங்கை அரசின் இந்த நடவடிக்கையை இந்திய அரசு கண்டிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதுபோல் சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், தொண்டமான் பெயரை நீக்கிவிட்டு வேறு பெயர்களை சூட்டியிருப்பது, தமிழ் சமுதாயத்தை அவமதிக்கும் செயலாகும் என குறிப்பிட்டுள்ளார். தொண்டமான் மறைந்து 20 வருடங்களுக்கு பிறகு, அவரது பெயரை நீக்குவது என்பது நாகரீகத்திற்கு புறம்பான செயலாகும் என்று கண்டனம் தெரிவித்துள்ள சரத்குமார், சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு மீண்டும் தொண்டமான் பெயரை சூட்ட இலங்கை அரசுக்கு, அனைத்து தமிழ் தலைவர்களும் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.