திங்கள், 8 ஜனவரி, 2018

​5-வது நாளாக தொடருகிறது போக்குவரத்து தொழிலாளர்களின் போராட்டம்! January 8, 2018

அரசு போக்குவரத்துத் தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் தொடரும், என போக்குவரத்து ஊழியர்கள் சங்கத்தினர் திட்டவட்டமாக அறிவித்துள்ளனர். 

தமிழக அரசு போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்தம், இன்றுடன் 5வது நாளாக நீடிக்கிறது. 

இந்நிலையில், சென்னை சிந்தாரிப்பேட்டையில் போக்குவரத்து ஊழியர்கள் சங்க கூட்டமைப்பினர் ஆலோசனை நடத்தினர். 

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய, கூட்டமைப்பின் தலைவர் சவுந்தரராஜன், போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் தொடரும் என அறிவித்தார். 

சென்னை உயர்நீதிமன்றத்தில் தங்களது தரப்பு வாதத்தை, இன்று முன்வைக்க உள்ளதாகவும், அவர் கூறினார். தற்காலிக ஓட்டுனர்களால் விபத்துக்கள் அதிகரித்து வருவதாக குறிப்பிட்ட அவர், தங்களது பிரச்னைகள் தீரும் வரை வேலைநிறுத்தம் தொடரும் என்றார். 

தங்களது போராட்டம் காரணமாக, பொதுமக்கள் பாதிக்கப்படுவது குறித்து, அரசு தான் பதில் சொல்ல வேண்டும், எனவும் சவுந்தரராஜன் கூறினார்.