திங்கள், 8 ஜனவரி, 2018

​ஆளுநர் உரைக்கு எதிர்ப்பு: திமுக - காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு! January 8, 2018

Image

தமிழக சட்டப்பேரவையில் ஆளுநரின் உரையை புறக்கணித்து திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் வெளிநடப்பு செய்தன.

2018-ம் ஆண்டிற்கான முதல் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. இதில் ஆளுநர் உரை தொடங்கிய உடனேயே அதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன.

அப்போது தமது உரைக்கு பிறகு விவாதிக்கலாம் என்றும், அதற்கு போதுமான நேரம் இருப்பதாகவும் ஆளுநர் பன்வாரிலால் தெரிவித்தார். ஆனால் ஆளுநர் உரையை தொடரக்கூடாது என முழக்கமிட்டவாறு திமுக, காங்கிரஸ், முஸ்லீம் லீக் உள்ளிட்ட எதிர்கட்சிகள் வெளிநடப்பு செய்தன. 
பின்னர் பேரவை வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், அதிமுக அரசுக்கு 111 MLA-க்கள் ஆதரவு மட்டுமே உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது என்றும்,  அதிமுக அரசுக்கு பெரும்பான்மை இல்லாத நிலையில் அரசின் கொள்கைகளை ஆளுநர் உரையாக வாசிப்பது ஜனநாயக விரோத செயல் என்றும் தெரிவித்தார். 

ஆளுநர் உரையை கண்டித்தே திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் வெளிநடப்பு செய்ததாகவும் விளக்கமளித்தார். நீதிமன்ற உத்தரவிற்கு பிறகு நிச்சயம் நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானம் கொண்டு வரப்படும் என்றும் அப்போது ஸ்டாலின் கூறினார்.

காங்கிரஸ் :

ஆளுநர் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுகவை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியும் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தது. இதனைத்தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் சட்டப்பேரவை தலைவர் ராமசாமி தலைமையில் அக்கட்சி உறுப்பினர்கள் அனைவரும் வெளிநடப்பு செய்தனர். 

பின்னர் அவையில் இருந்து வெளியே வந்த செய்தியாளர்களிடம் பேசிய ராமசாமி, மத்திய, மாநில அரசுகள் ஓகி புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கவில்லை எனவும், எத்தனை பேர் காணாமல் போய் உள்ளனர்? எத்தனை பேர் இறந்து உள்ளனர் என்பதை கூட இந்த அரசு சரியான புள்ளி விவரங்களை கூட அளிக்கவில்லை? என குற்றம்சாட்டினார்.