திங்கள், 1 ஜனவரி, 2018

முரசொலி இணையதளத்தை முடக்கிய ஹேக்கர்கள்! January 1, 2018

Image

திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலியின் இணையதளத்தை ஹேக்கர்கள் முடக்கியுள்ளனர். மேலும், முரசொலியின் முகப்புப் பக்கத்தில் புத்தாண்டு வாழ்த்தையும் ஹேக்கர்கள் தெரிவித்துள்ளனர்.

ஹேக்கர்களைக் குறிக்கும் புகைப்படத்துடன் இச்செய்தி முகப்பு பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது. இணையதள முடக்கத்தைக் குறித்து எச்சரிக்கும் வகையில், இணையதளத்தைப் பராமரிக்கும் நபர்கள், இணைய பாதுகாப்பு குறித்து அதிகம் கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அதில் பதிவிடப்பட்டுள்ளது.
மேலும், முரசொலி இணையதளத்தின் முகப்புப் பக்கத்தில் ஆங்கில பாடல் ஒன்றின் யூ ட்யூப் பக்கத்தையும் ஹேக்கர்கள் இணைத்துள்ளனர். இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

முன்னதாக, கடந்த மார்ச் மாதம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்துக்குத் தடை விதிக்க வேண்டும் என்று கூறி முரசொலி நாளிதழின் இணையதளம் முடக்கப்பட்டது.
லீ ஜியன் ஹேக்கர் குழு என்ற பெயரில் அதை முடக்கிய குழுவினர், அதில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்துக்குத் தடை விதித்து, ஜனநாயகத்தைக் காக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தனர். பின்னர், சிறிது நேரத்தில் முரசொலி இணையதளம் பழைய நிலைக்குத் திரும்பியது குறிப்பிடத்தக்கது.