வெள்ளி, 12 ஜனவரி, 2018

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மீது மூத்த நீதிபதிகள் சரமாரி குற்றச்சாட்டு January 12, 2018

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மீது மூத்த நீதிபதிகள் நான்கு பேர் சரமாரி குற்றச்சாட்டுகளை விடுத்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

உச்சநீதிமன்ற மூத்த நீதிபதிகள் செல்லமேஸ்வர், ரஞ்சன் கோகாய், மதன் லோக்கூர், குரியன் ஜோசப் ஆகியோர் கூட்டாக டெல்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அவர்கள், அசாதாரண சூழ்நிலையில் செய்தியாளர்களைச் சந்திப்பதாக தெரிவித்தனர். 
Image
உச்சநீதிமன்றத்தின் நிர்வாகம் சரியில்லை என குற்றம்சாட்டிய நீதிபதிகள், நீதித்துறையை சரிசெய்யாவிட்டால், நாட்டில் ஜனநாயகம் சீர்கெட்டுவிடும் என குறிப்பிட்டனர். நீதித்துறை பிரச்னைகள் குறித்து 4 மாதங்களுக்கு முன்பே,  தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதியாக கூறிய அவர்கள், பிரச்னைகளை தலைமை நீதிபதி மூலம் சரிசெய்ய முயன்றது தோல்வியில் முடிந்ததாகவும் குறிப்பிட்டனர். 

வழக்குகளை நீதிபதிகளுக்கு ஒதுக்கீடு செய்வதில், தலைமை நீதிபதி தன்னிச்சையாக முடிவு எடுப்பதாகவும் நீதிபதிகள் குற்றம்சாட்டினர். மேலும் விதிமுறை மற்றும் நடைமுறைகளை பின்பற்றாமல் தலைமை நீதிபதி முடிவு எடுத்துவருவதாகவும் புகார் தெரிவித்தனர். 

அரசியல் சாசனம் மற்றும் முக்கிய வழக்குகளை, மூத்த நீதிபதிகளுக்கு தராமல், ஜூனியர் நீதிபதிகளுக்கு தருவதாகவும் தலைமை நீதிபதி மீது நீதிபதிகள் குற்றம்சாட்டினர். மக்களிடம் நேரடியாக முறையிடும் நிலைக்கு, தலைமை நீதிபதி தள்ளிவிட்டதாக வேதனை தெரிவித்த மூத்த நீதிபதிகள், நாடு மிகவும் நெருக்கடியான சூழலில் இருக்கிறது என்றும் புகார் தெரிவித்தனர். 

மேலும் தலைமை நீதிபதி மீது கண்டனத் தீர்மானம் கொண்டுவர வேண்டுமா? என்பது பற்றி மக்களே, தீர்மானிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் கூறினர். இந்திய வரலாற்றில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் செய்தியாளர்களை சந்தித்தது இதுவே முதல்முறையாகும்.