சனி, 13 ஜனவரி, 2018

​சாலையோர கடைகள் வைக்க இனி ஆதார் கார்டு கட்டாயம்! January 13, 2018

Image

சாலையோர கடைகள் வைக்க, இனி ஆதார் கார்டு கட்டாயம் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சாலையோர கடைகள் வைக்க அனுமதி கேட்டு கொடுக்கப்பட்ட விண்ணப்பங்கள் மீது, விரைந்து முடிவெடுக்க சென்னை மாநகராட்சிக்கு உத்தரவிடக்கோரி, உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.

இந்த வழக்குகள் அனைத்தும், நீதிபதி வைத்தியநாதன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, சாலையோர கடைகள் வைக்க உரிமம் பெற்றவர்கள், அதனை வேறு நபர்களுக்கு விற்றுவிடுவதாக, மாநகராட்சி  தரப்பில் அப்போது தெரிவிக்கப்பட்டது. 

இதனை அடுத்து, இனி வரும் காலங்களில், ஒரே நபர் ஒன்றுக்கும் மேற்பட்ட கடைகளை நடத்துவதை தடுக்கும் வகையில், உரிமம் கேட்டு விண்ணப்பிக்கும் போது ஆதார் அட்டையை சமர்பிப்பது கட்டாயம் என்று நீதிபதி  உத்தரவிட்டார். மேலும், ஆதார் அட்டையுடன் விண்ணப்பிக்கும் விண்ணப்பங்கள் மீது, ஒரு மாதத்திற்குள் முடிவெடுக்க வேண்டும் எனவும் நீதிபதி அறிவுறுத்தினார்.

பள்ளி, கல்லூரி, மருத்துவமனை அருகே கடைகள் அமைக்கக்கூடாது என்றும், சிகரெட் போன்ற புகையிலை பொருட்கள் விற்பனை செய்ய அனுமதிக்கக்கூடாது எனவும் சென்னை மாநகராட்சிக்கு நீதிபதி  வைத்தியநாதன் உத்தரவிட்டார்.