2017ம் ஆண்டிற்கான இந்திய கல்வி நிலைமை குறித்த ஆண்டறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், இந்திய பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியம், திறன் மேம்பாட்டு அமைச்சகத்தின் செயலர் கே.பி.கிருஷ்ணன் ஆகியோர் முன்னிலையில் வெளியிடப்பட்டது.
கிராம மற்றும் ஊரக பகுதிகளில் கல்விகற்றுவரும் 14-18 வயதுக்குட்பட்ட மாணவர்களிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. இந்த வயதினரின் செயல்பாடுகள், திறன்கள், விழிப்புணர்வு, சமூக அறிதல், லட்சியங்கள் ஆகியவற்றை அடிப்படையாக வைத்து இந்த ஆய்வுகள் செய்யப்பட்டுள்ளன. செயல்பாடு என்பதன் கீழ் இந்த வயதினர் பள்ளி அல்லது கல்லூரிகளில் இணைந்து கற்கின்றனரா என்பதும், திறன் என்பதன் கீழ் மாணவர்களின் வாசிப்புத்திறன் மற்றும் கணக்குத்திறனும், விழிப்புணர்வு என்பதன் கீழ் ஊடகங்கள் மற்றும் செய்திகள் குறித்த அறிதல்களும், லட்சியங்கள் என்பதன் கீழ் அவர்களின் எதிர்காலத்திட்டங்கள் குறித்தும் சோதனைகள் செய்யப்பட்டுள்ளன.
அரசு சார்பில் செய்யப்பட்டுள்ள இந்த ஆய்வில் பல அதிர்ச்சிகர முடிவுகள் தெரியவந்துள்ளன.
ஆய்வு முடிவுகளின் படி, 14 -18 வயதுக்குட்பட்ட கிராம மற்றும் ஊரக மாணவர்களில் 86% பேர் பொதுக்கல்வித்திட்டத்தின் கீழ் கல்வி கற்று வருகிறார்கள். இவர்களில், 42% பேர் விவசாயம் அல்லது வீட்டுவேலைகள் உட்பட ஏதாவது ஒரு வேலை செய்துகொண்டே கல்வி கற்றுவருகிறார்கள்.
இந்த ஆய்வில் மாணவர்களுக்கு இரண்டாம் வகுப்பு மாணவர்கள் வாசிக்கும் அளவிற்கான வாக்கியங்கள் கொடுக்கப்பட்டு வாசிக்க வைத்துள்ளனர். இதில், 14 வயதுடயவர்களில் 53% பேர் வாசிக்கும் திறனோடும், 18 வயதுடையவர்களில் 60% பேர் வாசிக்கும் திறனுடையவர்களாகவும் உள்ளனர்.
இதேபோல், 14 வயதுடையவர்களில் 43.5% பேர் அடிப்படையான வகுத்தல் கணக்குத் தெரிந்தவர்களாகவும், 18 வயதுடையோரில் 40.5% பேர் அடிப்படையான வகுத்தல் தெரிந்தவர்களாகவும் உள்ளனர்.
இந்திய அரசின் கொள்கையின் படி, 14 வயதுக்குட்பட்டவர்கள் அனைவருமே குழந்தைகளாக கருதப்பட்டு அடிப்படைக் கல்வி உறுதிசெய்யப்பட வேண்டும் என இயங்கி வருகிறது. இந்நிலையில், 14 வயதைத் தாண்டியவர்களில் 50%க்கு மேற்பட்டவர்கள் இரண்டாம் வகுப்பு மாணவர்களுடைய பாடத்திட்டத்தில் வரும் வாக்கியங்களை வாசிக்கவும், வகுத்தல் கணக்குப் போடவும் தெரியாமல் இருப்பதாகவும் ஆய்வில் தெரியவந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.