வியாழன், 18 ஜனவரி, 2018

ஆசிரியரின் தண்டனை உத்தியால் பலியான மாணவன் - தலைமையாசிரியர் உட்பட இருவர் கைது! January 18, 2018

Image

சென்னையில் பள்ளி மாணவன் பலியான விவகாரத்தில் தலைமை ஆசிரியர், உடற்கல்வி ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

சென்னை திருவிக நகரை சேர்ந்த முரளி என்பவரின் இரண்டாவது மகன் நரேந்தர், பெரம்பூரில் உள்ள டான்பாஸ்கோ பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார்.  பொங்கல் விடுமுறைக்குபின் மாணவர் நரேந்தர், நேற்று பள்ளி சென்றுள்ளார். பள்ளிக்கு 10 நிமிடம் காலதாமதாக சென்ற மாணவரை அழைத்த உடற்கல்வி ஆசிரியர், மைதானத்தில் முட்டிபோட்டு நடக்கும் தண்டனை வழங்கியுள்ளார்.

அப்போது மயங்கி விழுந்த மாணவனை, அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு ஆசிரியர்கள் அழைத்து சென்றுள்ளனர். உடல்நிலை கவலைக்கிடமாக இருந்ததால் மருத்துவர்களின் அறிவுறுத்தலின் பேரில் உடனடியாக மேல்சிகிச்சைக்கு ஸ்டான்லி மருத்துவமனைக்கு, மாணவன் அழைத்து செல்லப்பட்டான். எனினும், வழியிலேயே அவனது உயிர் பிரிந்துள்ளது. இதையடுத்து, மாணவனின் பெற்றோரை வரவழைத்த போலீசார், இயற்கை முறையில் மாணவன் இறந்ததாக கையெழுத்து வாங்கி, உடலை பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

இதனிடையே, மாணவனை முட்டி போட்டு நடக்க வைத்ததே, அவனது மரணத்துக்கு காரணம் என குற்றஞ்சாட்டிய பெற்றோர் மற்றும் உறவினர்கள், பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில்  ஈடுபட்டனர்.  தகவலறிந்து வந்த போலீசார், பள்ளியிலிருந்த சிசிடிவி கேமிரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். அதில், மாணவன் பள்ளிக்கு வருவதும், பின்னர் மயங்கி விழுந்த மாணவனை  ஆட்டோவில் மருத்துவமனைக்கு அழைத்து செல்வதும் பதிவாகி உள்ளது. 
முன்னதாக, உடல் கல்வி ஆசிரியர் முட்டிபோட வைத்ததால் மாணவர் நரேந்தர் மரணமடைந்தது குறித்து கருத்து தெரிவித்த செங்கோட்டையன், இந்த விவகாரத்தில் தவறிழைத்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்திருந்தார்