
நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் இன்றுடன் நிறைவடைந்துள்ளது.
மக்களவையும், மாநிலங்களவையும் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நடப்பு நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடரில் முத்தலாக் தடை மசோதா உள்ளிட்ட பல்வேறு முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற பாஜக முயற்சி எடுத்தது.
முத்தலாக் தடை மசோதா மக்களவையில் நிறைவேறிய நிலையில் மாநிலங்களவையில் அதனை நிறைவேற்றுவது பாஜகவிற்கு பெரும் சவாலாக இருந்தது.
இந்த மசோதாவை தேர்வுக் குழுவிற்கு அனுப்ப வேண்டும் என்று மத்திய அரசுக்கு எதிர்க்கட்சிகள் நெருக்கடி கொடுத்து வந்தன. மாநிலங்களவையில் பாஜகவிற்கு பெரும்பான்மை இல்லாததால் மசோதாவை நிறைவேற்றுவதில் சிக்கல் நிலவி வந்தது.
கடைசி நாளான இன்று வரை மசோதாவை நிறைவேற்றும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டது. ஆனால் அந்த முயற்சி பலிக்கவில்லை.
இதையடுத்து, மாநிலங்களவை இன்று தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது. முன்னதாக மக்களவையும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டு குளிர்காலக் கூட்டத்தொடர் நிறைவடைந்தது.