வெள்ளி, 5 ஜனவரி, 2018

டெங்குவால் தமிழகத்தில் 4 மாதங்களில் 46 பேர் உயிரிழப்பு January 5, 2018

Image

டெங்குவால் தமிழகத்தில், கடந்த 4 மாதங்களில் 46 பேர் உயிரிழந்துள்ளதாக, அரசுத் தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதுரையை சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர், உயர்நீதிமன்ற மதுரை கிளையில், பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், இந்தியாவில், டெங்கு, சிக்குன்குனியா போன்ற காய்ச்சல்கள், பொது சுகாதாரத்திற்கு சவாலாக உள்ளதாகவும், இதை கட்டுப்படுத்த முறையான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதில்லை, என்றும் தெரிவித்துள்ளார். 

மேலும், தமிழகத்தில் தினமும் டெங்கு மற்றும் மர்ம காய்ச்சலுக்கு, இதுவரை 25 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், டெங்குவால்,உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு, 5 லட்ச ரூபாய் இழப்பீடாக வழங்க உத்தரவிட வேண்டும், என்றும் மனுவில் கூறியிருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன், ஹேமலதா அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசுத் தரப்பில் தாக்கல் செய்த பதில் மனுவில், டெங்குவை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் 40 ஆயிரம் ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், கடந்த செப்டம்பர் முதல் 4 மாதங்களில், 46 பேர் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது. 

இதையடுத்து நீதிபதிகள், டெங்குவால் உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்குவது குறித்து, கூடுதல் பதில்மனு தாக்கல் செய்ய, தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர். மேலும், இந்த வழக்கை வரும் 22-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Related Posts: