ஞாயிறு, 7 ஜனவரி, 2018

அழிவை நோக்கி பயணிக்கும் சாக்லேட்! January 6, 2018

Image

மனிதர்களின் விருப்பமான இனிப்பு வகையான சாக்லேட், பருவநிலை மாற்றம் காரணமாக  இன்னும் 30 வருடங்களில் காணாமல் போய்விடும் என அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

சாக்லேட் தயாரிக்கப் பயன்படும் கோக்கோ மரமானது, குளிர்ந்த மற்றும் நன்றாக மழைபொழியக்கூடிய பகுதிகளில் மட்டுமே வளரும். ஆனால், தற்பொழுதுள்ள வெப்பநிலை காரணமாக கோக்கோ மரம் சீரான வளர்ச்சியை அடைவதில்லை என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

உலகில் 2.1 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அதிகமானால், இன்னும் 30 வருடங்களில் சாக்லேட் தொழிற்சாலைகள் கடுமையாக பாதிக்கப்படும் என்று அமெரிக்க தேசிய கடல் மற்றும் வணிகமண்டல நிர்வாகத்தினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

உலகத்தின் மொத்த சாக்லேட் உற்பத்தியில், 50% உற்பத்திசெய்யும் ஆப்பிரிக்க நாடுகளான கோட் டி ஐவோரி மற்றும் கானாவும் அதிக பாதிப்பை அடையும்.

மற்ற பயிர்களைப்போல அல்லாமல், 90% கோக்கோ மரங்கள் சிறு பற்று நில உழவர்களால் மட்டுமே பயிரிடப்படுகிறது எனவும் அவர்களால் புதிய உழவு முறைகளை பயன்படுத்த முடியவில்லை எனவும் லண்டனைச்சேர்ந்த ஆராய்ச்சியாளர் ஹாக்கின்ஸ் தெரிவித்துள்ளார். 

அதுமட்டுமல்லாமல், இன்னும் சில வருடங்களில் 1 லட்சம் டன் சாக்லேட் பற்றாக்குறை ஏற்படும் எனவும் தெரிவித்தார்.