புதன், 10 ஜனவரி, 2018

மாணவியை தற்கொலைக்கு தூண்டியதாக பாஜக இளைஞரணி தலைவர் கைது! January 9, 2018

Image

”ஐ லவ் முஸ்லிம்ஸ்” என்று வாட்ஸ்அப்பில் குறுந்தகவல் அனுப்பியதற்காக மிரட்டப்பட்டதால், மாணவி  தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூரில் உள்ள சிக்மங்களூர் பகுதியில் வசித்து வரும் மாணவி தன்யஸ்ரீ. இவர், பி.காம் படித்து வருகிறார். இவர், சனிக்கிழமை அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம், அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வெள்ளிக்கிழமையன்று, தன் நண்பரான சந்தோஷிடம், வாட்ஸ்அப்பில் குறுந்தகவல் அனுப்பிக்கொண்டிருந்த பொழுது, அவர்களுக்கிடையில் சாதி, மதத்தைப்பற்றி வாக்குவாதம் நடந்துள்ளது. இதனடிப்படையில், சந்தோஷ் கேட்ட கேள்விக்கு, ”ஐ லவ் முஸ்லிம்ஸ்” என்று பதிலளித்துள்ளார்.

இதனால், ஆத்திரமடைந்த சந்தோஷ், இஸ்லாமியர்களிடம் எந்த விதமான நட்பும் வைத்துக்கொள்ளக்கூடாது என எச்சரித்துள்ளார். அதுமட்டுமல்லாமல், அவர்கள் இருவரும் குறுந்தகவல் பரிமாற்றம் செய்துகொண்டதை ஸ்க்ரீன்ஷாட் எடுத்து, அங்குள்ள பஜ்ரங் தள் மற்றும் விஷ்வ ஹிந்து பரிஷாத் அமைப்பிற்கு அனுப்பியுள்ளார். அந்த ஸ்க்ரீன் ஷாட் விரைவில் அனைவரிடம் பரவியதால், தன்யஸ்ரீயும், அவரது தாயும் மிகுந்த மன உளைச்சலிற்கு ஆளாகினர்.

வெள்ளிக்கிழமை, பாஜக இளைஞர் அணித்தலைவர் அனில்ராஜ் மற்றும் சில இளைஞர்கள் வந்து, தன்யஸ்ரீயையும் அவரது தாயாரையும் மிரட்டிச்சென்றுள்ளனர் என்று சிக்கமங்களூர் காவல்துறை கண்காணிப்பளர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இதனடிப்படையில், பாஜக இளைஞர் அணித்தலைவர் அனில்ராஜ் கைது செய்யப்பட்டுள்ளார் எனவும் சந்தோஷ் உட்பட நான்கு பேரை போலீசார் தேடிவருவதாகவும் தகவல் தெரிவித்தார்.