ஈரோட்டில் அதிக கட்டணம் வசூல் செய்த தனியார் பேருந்தை பொதுமக்கள் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழகம் முழுவதும் போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் காரணமாக தனியார் பேருந்துகள் பல்வேறு வழித்தடங்களிலும் இயக்கப்பட்டு வருகின்றன. திருப்பூர் மாவட்டம் செங்கப்பள்ளியில் இருந்து ஈரோடு நோக்கி வந்த தனியார் பேருந்தில், அதிக கட்டணம் வசூல் செய்ததாக பயணிகள் புகார் அளித்தனர்.
வழக்கமாக இந்த வழித்தடத்தில் 15 ருபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்ட இடத்தில், 50 ருபாய் வரை நடத்துனர் கட்டணம் வசூல் செய்துள்ளார். பேருந்தில் பயணித்த பொதுமக்கள், ஈரோடு பேருந்து நிலையத்தில், பேருந்தை சிறைப்பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ஓட்டுனர் மற்றும் நடத்துனரை எச்சரிக்கை செய்ததுடன், கூடுதலாக வசூல் செய்த பணத்தையும் பயணிகளிடம் திரும்பவும் ஒப்படைத்தனர்.