ஜனநாயகத்தை காப்பாற்றுவதற்காக பாஜவுக்கு வாக்களிக்க வேண்டாம் என வெற்றிமாறன், கோபி நயினார் உள்ளிட்ட நாடுமுழுவதும் உள்ள சுமார் 100 இயக்குநர்கள் வெளிப்படையாக கோரிக்கை விடுத்துள்ளது அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் பிரச்சாரம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், மக்கள், மீண்டும் நரேந்திர மோடியை ஆட்சியில் அமரவைப்பார்களா அல்லது ராகுலுக்கு ஒரு வாய்ப்பு வழங்குவார்களா என பெரும் விவாதங்கள், கருத்துக்கணிப்புகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், இந்தியாவின் பல்வேறு பகுதிகளை சேந்த சுமார் 100 திரைப்பட இயக்குநர்கள் ஆளும் பாஜகவிற்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்துப்பது போல் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
வாக்குப்பதிவுக்கு இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், ஜனநாயகத்தை காப்பற்ற பாஜகவிற்கு மீண்டும் வாக்களிக்க வேண்டாம் என அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இது தொடர்பாக அவர்கள் www.artistuniteindia.com இணையத்தில் ஜனநாயகத்தை காப்போம் எனும் முழக்கத்தின் கீழ் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
அந்த அறிக்கையில் தமிழ் திரைப்பட இயக்குநர்கள் வெற்றிமாறன், கோபி நயினார், அஜயன் பாலா, லீனா மணிமேகலை, அமுதன், கோம்பை அன்வர், பிரபல மலையாள இயக்குநர் பிரியதர்ஷன், உள்ளிட்டோர் கையெழுத்திட்டுள்ளனர். அதில், வரும் மக்களவை தேர்தலில் நாம் சிந்தித்து வாக்களிக்கவில்லை என்றால் பாசிச அச்சுருத்தலுக்கு ஆளாக நேரிடும் எனவும், நாட்டில் வகுப்பு வாத சூழலை உருவாக்க பசு பாதுகாவலர்கள் போர்வையில் பாஜக வன்முறையை ஏற்படுத்துவதாக குற்றம்சாட்டியுள்ளனர்.
தேசபக்தி எனும் துருப்புச் சீட்டுடை வைத்து, யாராவது பாஜகவுக்கு எதிராகச் செயல்பட்டால், அவர்கள் தேசத் துரோகிகள் என்று முத்திரை குத்தப்படுவதாகவும், தேசபக்தி எனும் பெயரில் பாஜக வாக்கு வங்கியை ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். பாஜகவின் இந்த ஆட்டத்தில் தலித்துகள் மற்றும் இஸ்லாமியர்கள் ஓரங்கப்பட்டு, இணையதளம் மற்றும் சமூகவலைதளம் மூலம் வெறுப்பு அரசியலை பாஜக பரப்புவதாகவும் இயக்குநர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
ராணுவத்தைப் பயன்படுத்துவதும் பாஜகவின் திட்டங்களில் ஒன்று என குறிப்பிட்டுள்ள இயக்குநர்கள், தேவையில்லாத போர் மூலம் நாட்டை ஆபத்தில் வைக்க முயற்சி நடப்பதாகவும் அச்சம் தெரிவித்துள்ளனர். மத்திய அரசுக்குச் சொந்தமான முக்கியமான நிறுவனங்களில், அந்த நிறுவனத்துக்குத் தொடர்பில்லாதவர்களை தலைமையிடத்தில் அமர வைத்து, உலகமே நம்மைப் பார்த்து சிரிக்கும்படி செய்கிறார்கள். திரைப்படங்கள் மற்றும் புத்தகங்களுக்குத் தடை விதிப்பது மற்றும் சென்சார் போன்ற நடவடிக்கைகள் மூலம் மக்களுக்கு உண்மை தெரியாத படி பாஜகவினர் பார்த்துக்கொள்வதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இன்னும் ஒருமுறை பாஜகவுக்கு அதிகாரம் வழங்கினால், அது மிகப் பெரிய தவறாக அமைந்துவிடும் எனவும் உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்தை சவப்பெட்டியில் வைத்து அடிக்கும் கடைசி ஆணியாக அது இருக்கும் எனவும் காட்டத்துடன் இயக்குநர்கள் தெரிவித்துள்ள ஒவ்வொரு கருத்தும் அரசியல் களத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.
பொதுவாகவே திரைப்பிரபலங்களுடன் நெருங்கிய நட்புறவை கடைப்பிடித்து வரும் பிரதமர் மோடிக்கு எதிராகவும், பாஜகவுக்கு எதிராகவும் 103 இயக்குநர்கள் சேர்ந்து கையொப்பமிட்டு வெளியிட்டுள்ள அறிக்கை தேர்தலில் எந்த அளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது வரும் நாட்களில் தெரியும்.
source ns7.tv