புதன், 1 ஜனவரி, 2020

மகாராஷ்டிரா அமைச்சரவை விரிவாக்கம்: காங் எம்.எல்.ஏக்கள் முகாமில் கலகக்குரல்!


Image
மகாராஷ்டிராவின் நேற்றைய அமைச்சரவை விரிவாக்கத்தில், அமைச்சர் பதவி கிடைக்காததால் பல காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் அதிருப்தியில் இருந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே தலைமையில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சி செய்து வருகின்றன. இதனிடையே மூன்று கட்சிகளை சேர்ந்த 36 பேர் அமைச்சர்களாக நேற்று பதவி ஏற்றனர். தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அஜித்பவார் துணை முதலமைச்சராக பதவி ஏற்றுள்ளார்.
இதனிடையே விரிவாக்கத்தின் போது அமைச்சர் பதவி கிடைக்காததால் முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான பிரித்விராஜ் சவான், முன்னாள் முதல்வர் சுஷில்குமார் ஷிண்டேவின் மகள் பிரனிதி (சோலாப்பூர் தொகுதி), சங்ராம் தோப்தே (போர் தொகுதி) போன்ற முக்கிய காங்கிரஸ் தலைவர்களுடன் வேறு சில காங் எம்.எல்.ஏக்கள் சிலரும் அதிருப்தியில் இருந்து வருவதாக கூறப்படுகிறது.
போர், வெல்கா, முல்ஷி பகுதிகளைச் சேர்ந்த உள்ளூர் காங்கிரஸ் பிரமுகர்கள் சந்தித்து அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து பேச்சுவார்த்தை நடத்தியிருப்பதாகவும் கூறப்படுகிறது.
பெயர் குறிப்பிட விரும்பாத மூத்த காங்கிரஸ் தலைவர் ஒருவர் கூறுகையில் அஸ்லாம் ஷேக் மற்றும் விஷ்வஜித் கதாம் ஆகியோருக்கு அமைச்சரவையில் இடம் கிடைத்துள்ளது. இவர்கள் இருவரும் தேர்தலுக்கு முன்னதாக பாஜகவில் இணைவதற்காக பேச்சுவார்த்தை நடத்தியவர்கள், பாஜக சார்பில் போட்டியிடுவதற்கு ஷேக்கிற்கு வாய்ப்பு உறுதியளிக்கப்பட்டிருந்த நிலையில் ஏதோ காரணங்களுக்காக அது நடைபெறாமல் போனது. இவர்களின் நேர்மை கேள்விக்குரியது என்றும் அவர் தெரிவித்தார்.
இதனிடையே புனேயைச் சேர்ந்த எம்.எல்.ஏ ஒருவருக்கு அமைச்சரவையில் இடம் கிடைக்காத விரக்தியில் அவரின் ஆதரவாளர்கள் காங்கிரஸ் கட்சியின் அலுவலகத்தை சூறையாடியுள்ளனர்.

credit ns7.tv