CREDIT NS7.tv
தேசிய குடியுரிமை திருத்தச் சட்டம் ஜனவரி 10ம் தேதி முதல் நாடுமுழுவதும் அமலுக்கு வருவதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
Citizenship Amendment Act எனப்படும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை மத்திய உள்துறை அமைச்சகம் கொண்டுவந்தது. இந்த சட்டத்திற்கு நாடு முழுவதும் எதிர்ப்புகளும், ஆதரவும் எழுந்த நிலையில் மக்களவை மற்றும் மாநிலங்களவையில் பெரும்பான்மை வாக்குகள் பெற்று இச்சட்டம் ஒப்புதல் பெற்றது. இதனையடுத்து, இந்தியா முழுவதும் இச்சட்டம் அமல்படுத்தப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவித்த நிலையில், இச்சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்த பல்வேறு மாநிலங்களின் முதல்வர்கள் தங்கள் மாநிலத்தில் இச்சட்டத்தை நிறைவேற்ற அனுமதிக்க மாட்டோம் என்று எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. கடந்த சில நாட்களுக்கு முன்பு கேரள சட்டமன்றத்தில் இச்சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
குடியுரிமை திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டால் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய இஸ்லாமிய சமூகத்தினர் பெரும்பான்மை வகிக்கும் நாடுகளில் இருந்து சிறுபான்மையினராக இருக்கும் இந்து, சீக்கிய மதம் உள்ளிட்டவற்றைச் சேர்ந்தவர்கள் இடம்பெயர்ந்து இந்தியாவில் குடியேற அனுமதி அளிக்கிறது. இச்சட்டம் மத அடிப்படையிலானது என்பதால் இச்சட்டத்திற்கு எதிராக பல்வேறு தரப்பிலிருந்தும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுவருகிறது.
இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் பல்வேறு கட்டங்களாக இச்சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்றுவந்த நிலையில், இச்சட்டத்திற்கு ஆதரவாக பாஜக மற்றும் வலதுசாரிகள் சார்பாக பேரணி மற்றும் பொதுக்கூட்டங்கள் நடைபெற்று வருகிறது.
அஸ்ஸாமில் CAA விற்கு எதிராக நடைபெற்ற போராட்டம்:
CAA வை எதிர்த்து நடைபெற்ற போராட்டம்:
இந்நிலையில், இச்சட்டம் ஜனவரி 10ம் தேதி முதல் உடனடியாக அமலுக்கு வருவதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
நாடு முழுவதும் சர்ச்சைகளுக்குள்ளாகியிருக்கும் இச்சட்டம் அமலுக்கு வந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குடியுரிமை திருத்தச் சட்டம் நாடுமுழுவதும் அமலுக்கு வந்ததைத் தொடர்ந்து #CitizenshipAmendmentAct என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது.