அமெரிக்கா - ஈரான் இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் வளைகுடா நாடுகளின் வான்பரப்பில் இந்திய விமானங்கள் செல்ல வேண்டாம் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
ஈராக் தலைநகர் பாக்தாத் விமான நிலையத்தில் அண்மையில் அமெரிக்க படைகள் நடத்திய தாக்குதலில், ஈரான் ராணுவ தளபதி சுலைமானி படுகொலை செய்யப்பட்டார். நேற்று அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில் பாக்தாத்தில் உள்ள அமெரிக்க-ஈராக் கூட்டுப்படைகளை குறிவைத்து ஈரான் ராக்கெட் குண்டுகளை வீசி தாக்குதலை தொடங்கியது.
இந்த தாக்குதலில் 80 பேர் உயிரிழந்ததாக ஈரான் நாட்டு தொலைக்காட்சி ஒன்று தெரிவித்துள்ளது. மேலும் பலர் படுகாயம் அடைந்துள்ளதாககவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இரு நாடுகளுக்கு இடையே பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தமது ட்விட்டரில், ஆல் இஸ் வெல் என பதிவிட்டுள்ளார். ஈரான் படையினர் நடத்திய தாக்குதலால் ஏற்பட்டுள்ள சேதாரங்கள் மற்றும் உயிரிழப்புகளை மதிப்பிடும் பணிகள் நடைபெற்று வருவதாக குறிப்பிட்டுள்ள அவர், தங்களிடம் உலகிலேயே மிகச் சிறந்த ராணுவமும் ஆயுத பலமும் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அதிகாரப்பூர்வமாக அறிக்கை வெளியிடுவேன் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே தங்கள் நாட்டின் எல்லையில் இருந்து உடனே வெளியேறுங்கள் என அமெரிக்க படையினருக்கு ஈரான் தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் முகமது ஜாவத் அசாரி தெரிவித்துள்ளார். ஈரான் படையினர் தாக்குதல் நடத்தியது தொடர்பாக தமது ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், போர் பதற்றத்தை அதிகரிக்கும் நோக்கில் தாங்கள் செயல்படவில்லை எனவும், தங்களை தற்காத்துக் கொள்ளும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாகவும் பதிவிட்டுள்ளார்.
போர் பதற்றம் அதிகரித்துள்ள சூழலில் ஈரான், ஈராக் நாடுகளுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள தகவலில், ஈராக் நாட்டில் உள்ள இந்தியர்கள் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் எனவும், ஈராக்கில் வசிப்போர் அந்நாட்டில் உள்ள இந்திய தூதரங்களை அணுகுமாறும் குறிப்பிட்டுள்ளது.
ஈரான், ஈராக் உள்ளிட்ட வளைகுடா வான்பரப்பை பயன்படுத்த வேண்டாம் என இந்திய விமான நிறுவனங்களுக்கும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
credit ns7.tv