தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலில், அதிமுக-வை விட கூடுதலான இடங்களில் திமுக வெற்றி பெற்றுள்ளது.
தமிழகத்தில் பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில், ஊரக உள்ளாட்சி தேர்தல், கடந்த டிசம்பர் 27 மற்றும் 30-ம் தேதிகளில், இரு கட்டங்களாக நடத்தப்பட்டன. இதில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி நேற்று முன்தினம் தொடங்கியது. வாக்குச்சீட்டு முறையில் தேர்தல் நடைபெற்றதால் முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டது.
515 மாவட்ட கவுன்சிலர் பதவிக்கான முடிவுகள் வெளியான நிலையில், திமுக 242 இடங்களையும், அதிமுக 215 இடங்களையும் கைப்பற்றின. திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ், 15 மாவட்ட கவுன்சிலர் இடங்களிலும், அதிமுக கூட்டணியில் உள்ள பாமக 14 இடங்களிலும் வெற்றி பெற்றன. மாவட்ட கவுன்சிலர் பதவிகளில், மூன்று சுயேட்சைகளும் வெற்றி பெற்றுள்ளனர்.
314 ஒன்றிய தலைவர் பதவிகளில், அதிமுக கூட்டணி 108 இடங்களிலும், திமுக கூட்டணி 129 இடங்களிலும் வெற்றியை ஈட்டின. அமமுக இரண்டு இடங்களிலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூன்று இடங்களிலும் வெற்றி பெற்றன. ஒன்றிய தலைவர் பதவிகளை பிடிப்பதில், 72 இடங்களுக்கு இழுபறி நீடித்து வருகிறது.
இதே போல், 5 ஆயிரத்து 90 ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கான தேர்தலில், அதிமுக கூட்டணி 2 ஆயிரத்து 211 இடங்களிலும், திமுக கூட்டணி 2 ஆயிரத்து 345 இடங்களிலும், வெற்றி பெற்றுள்ளன. அமமுக 95 இடங்களிலும் சுயேட்சைகள் 426 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளனர். இதன் மூலம் 27 மாவட்ட தலைவர் பொறுப்புகளில், 12 இடங்களை அதிமுகவும், 13 இடங்களை திமுகவும் கைப்பற்றியுள்ளன.
credit ns7.tv