சென்னை: தமிழகத்தில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை உறுப்பினர்கள் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது. தமிழ்நாட்டில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 6 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் வருகிற ஏப்ரல் 2ம் தேதியுடன் முடிவடைகிறது. இதை தொடர்ந்து ஏற்படும் காலி இடங்களை நிரப்புவதற்காக, இந்திய தேர்தல் ஆணையம் தேர்தல் கால அட்டவணையை வெளியிட்டுள்ளது. அதன்படி இன்று வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்குகிறது. வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய கடைசி நாள் மார்ச் 13ம் தேதி. மார்ச் 16ம் தேதி வேட்பு மனு பரிசீலனை செய்யப்படும்.
வேட்பு மனுக்களை திரும்ப பெற்றுக் கொள்வதற்கான கடைசி நாள் 18.3.2020. வாக்குப்பதிவு நாள் 26.3.2020. வாக்குப்பதிவு நேரம் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை. அன்றைய தினம் மாலை 5 மணி முதல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும். இந்திய தேர்தல் ஆணையம், தமிழ்நாடு சட்டமன்ற பேரவை செயலகத்தின் செயலாளரை தேர்தல் நடத்தும் அதிகாரியாகவும், தமிழ்நாடு சட்டமன்ற பேரவை செயலகத்தின் கூடுதல் செயலாளரை (பாலசுப்பிரமணியம்) உதவி தேர்தல் நடத்தும் அதிகாரியாகவும் நியமனம் செய்துள்ளது.
வேட்பு மனுக்களை பிற ஆவணங்களுடன் தேர்தல் நடத்தும் அதிகாரி முன்போ அல்லது உதவி தேர்தல் நடத்தும் அதிகாரி முன்போ தலைமை செயலகத்தில் உள்ள அவர்களது அலுவலகத்தில் மார்ச் 6ம் தேதி முதல் 13ம் தேதி வரை காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை தாக்கல் செய்யலாம்.
தமிழகத்தில் இருந்து அதிமுக, திமுக சார்பில் தலா 3 மாநிலங்களவை எம்பிக்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ளது. இந்நிலையில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். அதில் ஏற்கனவே மாநிலங்களவை உறுப்பினராக உள்ள திருச்சி சிவா, அந்தியூர் செல்வராஜ், என்.ஆர்.இளங்கோ ஆகியோர் திமுக சார்பில் போட்டியிடுவார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதிமுகவில் வேட்பாளர்கள் பட்டியல் இன்று அறிவிக்கப்படாமல் உள்ளது.
credit dinakaran.com