வெள்ளி, 6 மார்ச், 2020

டெல்லி வன்முறையை மறைக்க கொரோனா பீதி கிளப்புகிறார்கள்: மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு

2020-03-05@ 00:07:32








கொல்கத்தா: ‘‘டெல்லி வன்முறையை மறைக்க கொரோனா வைரஸ் பீதியை கிளப்புகின்றனர்’’ என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றஞ்சாட்டி உள்ளார். இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவத் தொடங்கி உள்ளது. நாடு முழுவதும் தற்போது 28 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் நேற்று அளித்த பேட்டியில் தெரிவித்தார்.  இந்நிலையில், மேற்குவங்க மாநிலம் மால்டா மாவட்டத்தில் நடந்த பேரணியில் கலந்து கொண்டு அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி   கூறியதாவது: டெல்லி வன்முறை சம்பவத்தை திசை திருப்பவே கொரோனா வைரஸ் குறித்த பீதியை மத்திய பாஜ அரசு பரப்பி வருகிறது. கொரோனா, கொரோனா என்று சிலர் கத்திக் கொண்டிருக்கிறார்கள். அது ஒரு பயங்கரமான நோய்தான், ஆனால், அதுகுறித்து பீதியை கிளப்ப வேண்டாம்.

டெல்லி வன்முறையில் உண்மையில் எத்தனை பேர் இறந்தார்கள் என்பது யாருக்கும் தெரியாது. உண்மையான கொரோனா வைரசை (டெல்லி வன்முறை) மக்கள் மறக்கச் செய்ய, அவர்கள் டி.வி சேனல்களை பயன்படுத்தி கொரோனா வைரசை சுற்றி ஒரு மிகைப்படுத்தலை உருவாக்குகிறார்கள். மேற்கு வங்கத்தில் ஒரு நபரை எலி கடித்தால் கூட, சிபிஐ  விசாரணையை பாஜ.வினர்  கோருகிறார்கள். இவ்வளவு பேர் கொலை செய்யப்பட்ட பின்னரும், அங்கு நீதி விசாரணை இல்லை. உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் டெல்லி வன்முறை சம்பவம் தொடர்பாக நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும். டெல்லியில் உடல்கள் குவியல் குவியல்களாக காணப்படுகின்றன. வன்முறையால் பலர் வீடற்றவர்களாக மாறிவிட்டனர். சாக்கடைகளில் இருந்து உடல்கள் மீட்கப்படுகின்றன. ஏழு நூறு பேரை காணவில்லை.  இவ்வாறு மம்தா பானர்ஜி கூறினார்.
credit dianakaran.com