புதன், 4 மார்ச், 2020

இந்திய முஸ்லிம்கள் மீது ஒழுங்கமைக்கப்பட்ட வன்முறை ஜவாத் ஸரீஃப் கண்டனம்:

டெல்லி கலவரம் குறித்து ஈரான்: இந்திய முஸ்லிம்கள் மீது ஒழுங்கமைக்கப்பட்ட வன்முறை ஜவாத் ஸரீஃப் கண்டனம்: இந்திய முஸ்லிம்களுக்கு எதிரான ஒழுங்கமைக்கப்பட்ட வன்முறை அலைகளை ஈரான் அரசு கண்டிக்கிறது. புத்தியில்லாத வன்முறையாளர்களை மேலோங்க விடக்கூடாது

வடகிழக்கு டெல்லியில் ஏற்பட்ட வனுமுறை சம்பவத்தில் இதுநாள் வரையில் 47 மக்கள் உயிரிழந்துள்ளனர். இந்த வன்முறை சம்பவத்தை ஈரான் அரசு வன்மையாக கண்டித்துள்ளது.  ஈரான் வெளிவிவகாரத் துறை அமைச்சர் ஜவாத் ஸரீஃப் இது குறித்து கூறுகையில் “இந்திய முஸ்லிம்களுக்கு எதிரான ஒழுங்கமைக்கப்பட்ட வன்முறை அலைகளைக் கண்டிக்கிறோம்,புத்தியில்லாத வன்முறையாளர்களை மேலோங்க விடக்கூடாது என்று இந்திய அரசை கேட்டுக் கொள்கிறோம் என்று தெரிவித்தார்.
இந்தோனேசிய, துருக்கி, பாகிஸ்தான் போன்ற இஸ்லாமிய பெரும்பான்மை நாடுகள் இதற்கு முன் டெல்லி வன்முறை தொடர்பாக அதிகாரப்பூர்வ கண்டனங்களை பதிவு செய்திருந்தனர். இந்த பட்டியலில் ஈரான் நான்காவது நாடாக சேர்ந்துள்ளது.
ஜவாத் ஸரீஃப் பொதுவாக கனமான சொற்களை பயன்படுத்தமாட்டார். வார்த்தைகளும் கவனமாக இருக்கும். நேற்று தன்னுடைய ட்விட்டரில், “இந்திய முஸ்லிம்களுக்கு எதிரான ஒழுங்கமைக்கப்பட்ட வன்முறை அலைகளை ஈரான் அரசு கண்டிக்கிறது. பல நூற்றாண்டுகளாக ஈரான் இந்தியாவின் நண்பராக இருந்து வருகிறது. அனைத்து இந்தியர்களின் நல்வாழ்வை உறுதிப்படுத்தவும், புத்தியில்லாத வன்முறையாளர்களை மேலோங்க விடக்கூடாது என்றும் இந்திய அதிகாரிகளை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். அமைதியான உரையாடல் ஒன்றே முன்னோக்கி செல்வதற்கான வழி” என்று பதிவு செய்துள்ளார்.
வெளியுறவு அமைச்சகம் கடந்த காலத்தில் துருக்கி , பாகிஸ்தானின் கண்டனங்களை நிராகரித்தது. ஆனால், ஜவாத் ஸரீஃப் கண்டனத்திற்கு இந்திய தரப்பிலிருந்து உத்தியோகபூர்வ பதில் இதுவரை கொடுக்கப்படவில்லை.
ஈரான் மீதான அமெரிக்கா பொருளாதாரத் தடையால், இந்தியா அந்நாட்டிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியை  நிறுத்தியது.  இருப்பினும், சபாஹர் துறைமுகத்தில் இந்தியா  தொடர்ந்து பணியாற்றி வருகிறது.
இந்தோனேசிய மத விவகார அமைச்சகம் இந்திய முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையை கண்டித்து அறிக்கை வெளியிட்டது. அதன் பின்னர், இந்தோனேசிய அரசு டெல்லி கலவரம் குறித்த தனது கவலைகளை, ஜகார்த்தாவில் உள்ள இந்திய தூதகரிடம் தெரிவித்தது.
துருக்கியின் ஜனாதிபதி எர்டோகன், டெல்லி வன்முறை குறித்து குறிப்பிடுகையில், “இஸ்லாமிய மக்கள் படுகொலைகள் செய்யப்படுவது இந்தியாவில் பரவி வருவதாக கூறியிருந்தார்.
குடியுரிமை திருத்தம் சட்டத்திற்கு எதிராக, கடந்த டிசம்பர் மாதம் பேசிய மலேசிய பிரதமர் மகாதீர் பின் முகமது ,(தற்போது, பதவியில் இருந்து விலகியுள்ளார்), குடியுரிமை திருத்த சட்டத்தால் மக்கள் இறந்து கொண்டிருக்கிறார்கள், என்று கருத்து தெரிவித்தார். இந்த கருத்துக்களில் உண்மையில்லை, தவறானது என்று இந்தியா நிராகரித்தது.
குடியுரிமை திருத்தம் சட்டம் நிறைவேற்றப்பட்ட பின், வங்காள தேசப் பிரதமர் ஷேக் ஹசீனா, சிஏஏ, என்ஆர்சி ஆகியவை இந்தியாவின் “உள் விவகாரங்கள்” என்றாலும், குடியுரிமைச் சட்டம் தற்போது “தேவையில்லை” என்று கூறியிருந்தார்.
credit indianexpress.com