புதன், 4 மார்ச், 2020

வாட்ஸ்ஆப் உதவியால் தாக்குதல்களை அரங்கேற்றிய கலவரக்காரர்கள்...

டெல்லி வன்முறை வெறியாட்டம் : வாட்ஸ்ஆப் உதவியால் தாக்குதல்களை அரங்கேற்றிய கலவரக்காரர்கள்... சிறப்பு விசாரணைக்குழு அந்த மாவட்டத்தில் இருக்கும் 13 காவல் நிலையங்களிலும், குற்றவாளிகளின் பட்டியல்களை கேட்டுள்ளது

Mahender Singh Manral :  பிப்ரவரி 23ம் தேதி வடகிழக்கு டெல்லியில் பாஜகவின் கபில் மிஸ்ரா, சி.ஏ.ஏவுக்கு எதிராக, ஜாஃப்ராபாத் மெட்ரோ ஸ்டேசனில், போராட்டம் நடத்தியவர்களை எச்சரிக்கை செய்யும் வகையில் பேசினார். இதனைத் தொடர்ந்து இரு தரப்பில் இருந்தும் பல்வேறு வாட்ஸ்ஆப் க்ரூப்கள் உருவாக்கப்பட்டு, அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செய்திகளை பரப்பியுள்ளதை காவல் துறையினர் கண்டறிந்துள்ளது.
பிப்ரவரி 23 மற்றும் 24 தேதிகளில் அதிக அளவில் வாட்ஸ்ஆப் குரூப்கள் உருவாக்கப்பட்டுள்ளது. கலவரத்தை அதிகப்படுத்தும் முயற்சியாக, டெல்லி கலவரத்திற்கு சற்றும் சம்பந்தமே இல்லாத வீடியோக்களும் அந்த குழுவில் பரப்பப்பட்டது கண்டறியப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு டெல்லி காவல்துறை கைது செய்த வன்முறைக்காரர்கள் தொடர்பாக, செய்தியாளர்கள் சந்திப்பில், வெளியிட்ட வீடியோவில் நெய் டப்பாவில் இருந்து குண்டுகள் எடுக்கப்பட்டது பதிவாகியிருந்தது. அந்த வீடியோவையும் கூட தவறாக சித்தகரித்து இந்த வாட்ஸ்ஆப் குரூப்களில் பகிரப்பட்டுள்ளது. இதே வாட்ஸ்ஆப் குரூப்களில் தான், எங்கே கூடுவது, எந்தெந்த கடைகள் மற்றும் வீடுகளை தாக்குவது போன்ற தகவல்களும் பகிரப்பட்டுள்ளது.
கலவரத்தில் ஈடுபட்டவர்களின் பங்குகளை, அவர்களின் போன்கள் லொகேஷன்களை வைத்து விசாரித்து வருகின்றோம். உள்ளூர் குற்றவாளிகள் மற்றும் அவர்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகல், நடைபெற்ற கொலைகளில் அவர்களின் பங்குகள் குறித்தும் ஆராய்ந்து வருகின்றோம் என காவல்துறை அறிவித்துள்ளது. கைது செய்யப்பட்ட சிலர் இதற்கு முன்பு நகைகளை திருடுதல், பிக்பாக்கெட், மற்றும் திருட்டு தொழில்களில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்துள்ளது.
தயால்பூர் காவல்நிலையத்திற்கு கீழ் வரும் பகுதிகளில் 10 நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஷேர்பூர் சௌக் பகுதியில் நின்றிருந்த அவர்களின் கம்யூனிட்டியை சேர்ந்த மக்கள் மீது தாக்குதல் நடத்தபட்டது தெரிய வந்தவுடன், கற்களை வீசியும், வாகனங்களை சேதம் செய்தும், சில கடைகளுக்கு தீயிட்டும் கலவரத்தை ஏற்படுத்தினர் என்று காவல்துறை அறிவித்துள்ளது.
கார்களுக்கு தீ வைக்கும் போது, கார்களுக்குள் கடவுளின் புகைப்படம், உருவசிலைகள் இருக்கிறதா என்பதை பார்த்துள்ளனர். மேலும் அந்த கார்களில் எழுதப்பட்டிருக்கும் பெயர்களையும் படித்துள்ளனர். குறிப்பிட்ட மதத்தினர்களின் கார்களை மட்டுமே இவ்வாறு எரித்துள்ளனர் என்று விசாரணையில் தெரிய வந்துள்ளது.
அவர்கள் உருவாக்கிய வாட்ஸ்ஆப் க்ரூப்களில் “வீடுகளில் இருந்து வெளியேறுங்கள்… உயிரைக் காப்பாற்றுங்கள்” போன்ற வாய்ஸ் மெசேஜ்கள் அதில் அனுப்பப்பட்டுள்ளது. மேலும் கலவரங்கள் வெடித்த இடங்களில் நடைபெற்ற ஆலோசனைகளும் இந்த வாட்ஸ்ஆப் க்ரூப்பில் இடம் பெற்றிருக்கிறது.
அந்த பகுதிகளில் வசித்து வந்த உள்ளூர் தலைவர்கள், லோனி மற்றும் காஸியாபாத் பகுதிகளில் இருந்து அடியாட்களை வர கூறியிருப்பதும் தெரிய வந்துள்ளது. அவர்கள் தொடர்பாகவும் விசாரணை நடத்தி வருகிறது காவல்துறை. வடகிழக்கு டெல்லியை வந்தடைந்த அந்த அடியாட்கள் குழுக்களாக பிரிந்து தாக்குதல்களை நடத்தியுள்ளனர். அவர்களுக்கு உதவுவதற்காக உள்ளூர் ஆட்களும் உடன் இருந்துள்ளனர் என்றும் காவல்துறையினர் அறிவித்துள்ளனர். உள்ளூர் ஆட்களின் உதவியுடன் குறிப்பிட்ட கடைகள் மற்றும் வீடுகள் தாக்கப்பட்டுள்ளது.
சிறப்பு விசாரணைக்குழு அந்த மாவட்டத்தில் இருக்கும் 13 காவல் நிலையங்களிலும், குற்றவாளிகளின் பட்டியல்களை கேட்டுள்ளது. இதுவரை டெல்லி வன்முறை தொடர்பாக 46 வழக்குகள் ஆர்ம்ஸ் ஆக்ட்டின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது. 34 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 1427 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 436 முதன்மை தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.