செவ்வாய், 17 மார்ச், 2020

வண்ணாரப்பேட்டை ஷாஹீன் பாக் போராட்டம் தள்ளிவைக்கப்படுமா?

வண்ணாரப்பேட்டை ஷாஹீன் பாக் போராட்டம் தள்ளிவைக்கப்படுமா? முடிவில் இழுபறி


தமிழ்நாடு இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு, கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக, தமிழகத்தில் சென்னை வண்ணாரப்பேட்டை உள்ளிட்ட இடங்களில் நடந்துவரும் சிஏஏ எதிர்ப்பு...
தமிழ்நாடு இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு, கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக, தமிழகத்தில் சென்னை வண்ணாரப்பேட்டை உள்ளிட்ட இடங்களில் நடந்துவரும் சிஏஏ எதிர்ப்பு தொடர் போராட்டங்களை தற்காலிகமாக ஒத்திவைக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளது. ஆனால், இதற்கு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சிலர் மறுப்பு தெரிவித்துள்ளதால் இழுபறி ஏற்பட்டுள்ளது.
மத்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டத்தை (சிஏஏ) எதிர்த்து டெல்லி ஷாஹீன் பாக் பகுதியில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தொடர் போராட்டம் தொடங்கியது.  ஷாஹீன் பாக் போராட்டத்தை தொடர்ந்து, தமிழகம், கர்நாடகா, பஞ்சாப், மேற்குவங்கம், கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் சிஏஏ எதிர்ப்பு போராட்டம் நடைபெற்றது. சிஏஏ சட்டம் மத ரீதியாக குடியுரிமை அளிப்பதாகக் கூறி நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்தன.
இதனைத் தொடர்ந்து, சென்னை வண்ணாரப்பேட்டையில், சிஏஏ, என்பிஆர், என்.ஆர்.சி ஆகியவற்றை எதிர்த்து மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், வண்ணாரப்பேட்டை போராட்டம் சென்னை ஷாஹீன் பாக் என்று அரசியல் நோக்கர்களால் வர்ணிக்கப்பட்டது.
இதனிடையே, சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் பாதிப்பால் உலகம் அளவில் இதுவரை 6,500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 1.72 லட்சம் பேருக்கு இந்த கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. உலக நாடுகளை அச்சுறுத்திவரும் இந்த கொடிய கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த, இதை தேசிய பேரிடராக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், மக்கள் ஒரே இடத்தில் கூட்டமாக கூட வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கேரளாவில் சினிமா தியேட்டர்களை மார்ச் 31 வரை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. டெல்லி, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் எல்.கே.ஜி முதல் 5-ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு விடுமுறை அறிவித்துள்ளது.
இந்த நிலையில், சென்னை வண்ணாரப்பேட்டையில் சிஏஏ எதிர்ப்பு போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில், கொரோனா பரவல் அச்சம் காரணமாக, தமிழகத்தில் ஷாஹீன் பாக் வழியிலான தொடர் இருப்பு போராட்டங்களை ஒத்திவைக்குமாறு தமிழ்நாடு இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு கோரிக்கை வைத்துள்ளது.
தமிழ்நாடு இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், “உலக அளவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதாலும் நம் நாடு இதை தேசிய பேரிடர் என்று அறிவித்திருப்பதாலும் நாட்டு மக்களின் உயிரையும் நலனையும் கருத்தில் கொண்டு அனைத்து சாஹின் பாக் வழி தொடர் இருப்பு போராட்டங்களை தற்காலிகமாக ஒத்திவைக்குமாறு பொதுமக்களை தமிழ்நாடு இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகள் கூட்டமைப்பு கேட்டுக்கொள்கிறது. நாட்டு மக்கள் மீது அக்கறையும் நாட்டின் நலனையும் கருத்தில் கொண்டு கூட்டமைப்பு இந்த முடிவை மேற்கொண்டுள்ளது. ஆயினும் வருங்காலத்தில் தமிழகத்தில் என்.பி.ஆர்.-ஐ நடைமுறைப்படுத்த அரசு முயற்சிக்குமானால், நாம் தொடர் இருப்பு போராட்டங்களை வீரியமாக முன்னெடுப்போம் என்பதையும் கூட்டமைப்பு தெரிவிக்கிறது. தமிழகத்தில் என்.பி.ஆர்.-ஐ நடைமுறைப்படுத்த தமிழக அரசு முற்படுமேயானால் அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகளின் ஒத்துழைப்புடன் பொதுமக்கள் ஒத்துழையாமை இயக்கத்தை நடத்துவார்கள் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்” என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பின் தலைவராக பி.ஏ.காஜா மொய்னுதீன் பாகவியும் ஒருங்கிணைப்பாளர்களாக எம்.முஹம்மது மன்சூர் காஸிமி, அல்ஹாஜ் எம்.பஷீர் அஹமது ஆகியோர் உள்ளனர். இந்த கூட்டமைப்பில், “தமிழ் மாநில ஜமாத்துல் உலமா சபை, தமுமுக, ஜமா அத்தே இலாமி ஹிந்த், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா, இந்திய தவ்ஹீத் ஜமாஅத், எஸ்டிபிஐ, மமக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், உள்ளிட்ட 22 இயக்கங்கள் கட்சிகள் இடம் பெற்றுள்ளன.
ஆனால், சென்னை வண்ணாரப் பேட்டையில், போராட்டத்தில் ஈடுபட்டு வருபவர்கள் போராட்டத்தை தள்ளிவைக்க முடியாது என்று மறுப்பு தெரிவித்துள்ளனர்.
இது குறித்து தமிழ்நாடு இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பஷீர் அஹமது தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸிடம் கூறுகையில், “கொரோனா வைரஸ் பரவிவருவதால் மத்திய அரசு தேசிய பேரிடர் என்று அறிவித்துள்ளது. மக்கள் நலன் கருதி இந்தப் போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைக்குமாறு  கூட்டமைப்பு சார்பில் கோரிக்கை விடுத்துள்ளோம். சிலர், இந்தப் போராட்டத்தை கைவிடமாட்டோம் என்று கூறலாம். ஆனால், சொல்ல வெண்டியது எங்கள் கடமை. தமிழக அரசும் சுகாதாரத்துறை மூலமாக நீதிமன்ற உத்தரவு பெற முயன்றுவருவதாக தகவல் வந்துள்ளது. வேலூர் மாவட்ட ஆட்சியர் திருமண மண்டபங்களை மூட சொல்லிவிட்டார். திருமணங்களைக்கூட எளிமையாக நடத்துங்கள். கொரோனா வைரஸ் ஒரு ஆளுக்கு வந்துவிட்டால் அது பரவி ஆயிரம் பேரை பாதிக்கும். இது இபோது உள்ள சூழ்நிலை. அதனால், நாங்கள் என்ன சொல்கிறோம் என்றால் சிஏஏ போராட்டம் நடத்துபவர்களை தற்காலிகமாக போராட்டத்தை நிறுத்தி வைக்குமாறு சொல்கிறோம். சூழல் சரியான பிறகு நம்முடைய போராட்டங்களை மாற்றி அமைப்போம் என்று கூறியுள்ளோம். மேலும், அரசு கொரோனா அச்சம் இல்லை என்று சொல்கிறபோது இந்த போராட்டங்களை மீண்டும் செய்துகொள்ளலாம்.
இப்போது நாங்கள் அறிவித்துள்ளதை போராடுபவர்கள் கேட்கிறார்கள், கேட்கவில்லை என்பதல்ல விஷயம். நாங்கள் சொன்னது வெகுஜன மக்களுக்கு உடனே போகாது. அதை இயக்கத் தலைவர்கள் ஊடகங்களுக்கு செய்தியாக அளிப்பார்கள்.  தமுமுக, எஸ்டிபிஐ ஆகியவற்றில் இருந்து போராட்டம் தற்காலிகமாக போராட்டம் ஒத்திவைக்கப்படுவதை  சொல்வார்கள். போராட்டக் களத்தில் இருப்பவர்களால் உடனடியாக எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்ள முடியாது. கொஞ்சம் கொஞ்சமாகத்தான் அவர்கள் மனநிலை மாறும். இந்த முடிவுக்கு அரசு யாரையும் மிரட்டவும் இல்லை. யாரையும் பணிய வைக்கவும் இல்லை.
இந்த போராட்டத்தின் தாக்கம் என்னவென்றால், உள்துறை அமைச்சர் அமித்ஷா ஒரு அங்குலம் கூட பின்வாங்கமாட்டோம் என்று கூறியவர் ராஜ்யசபாவில் நான்கு நாட்களுக்கு முன்பு நாங்கள் அதை சீர் செய்கிறோம். எந்த மாநிலத்திலும் ஒருவருக்கும் ஆபத்தைக் கொடுக்க மாட்டோம் என்று கூறுகிறார். நீங்கள் சொல்வதை திருத்தமாக கொண்டுவாருங்கள் என்று குலாம்நபி ஆசாத் கூறுகிறார். நம்முடைய கோரிக்கை நடைமுறைப்படுத்துவதற்கான வேலைகள் செய்யும்போது, நீங்கள் எல்லோருமே போராடியதில் ஒரு நன்மை கிடைக்கப் போகிறது அதை அனுபவிக்க உயிரோடு இருக்க வேண்டும் இல்லையா? அதனால், போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைக்க வேண்டும் என்று கேட்கிறோம். ” என்று கூறினார்.
credit indianexpress.com