தமிழகம் முழுவதும் குடிநீர் கேன் உற்பத்தியாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் அனுமதியின்றி செயல்பட்டு வரும் ஆலைகள் மீது நடவடிக்கை எடுத்து, வரும் 3-ம் தேதிக்குள் அறிக்கை சமர்பிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம், உத்தரவிட்டது. இந்நிலையில் அனுமதியின்றி செயல்படும் நிறுவனங்களுக்கு தமிழக அரசு சீல் வைத்து வருகிறது. இதனை கண்டித்து குடிநீர் கேன் உற்பத்தியாளர்கள் தொடர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அரசின் இந்த முடிவால் ஈரோடு மாவட்டத்தில் நாள்தோறும் 1 லட்சம் கேன் வாட்டர் விநியோகம் பாதிக்கப்பட்டிருப்பதாக கேன் வாட்டர் உற்பத்தி மற்றும் விநியோகஸ்தர்கள் கூறியுள்ளனர். மேலும் அரசு இதில் தலையிட்டு 2014 அரசாணையை தளர்வு செய்து நிலத்தடி நீரை குடிநீர் நிறுவனங்கள் எடுக்க அனுமதி வழங்கவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கும்பகோணம், பாபநாசம், திருவிடைமருதூர் பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட கேன் குடிநீர் உற்பத்தியாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும், குடிநீர் உற்பத்தியாளர் சங்க கூட்டம் ஆலோசனைக் கூட்டமும் கும்பகோணத்தில் நடைபெற்றது. இந்த தொழிலை நம்பி ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் இருப்பதால் அதனை கருத்தில் கொண்டு பிரச்சினைக்கு சுமுக தீர்வு காண வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
credit ns7.tv