credit ns7.tv
கீழடியில் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட தரைத் தளத்தின் தொடர்ச்சி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம் கீழடியில் கடந்த பிப்ரவரி 19ஆம் தேதி 6ஆம் கட்ட அகழாய்வை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.
கடந்த 16 நாட்களாக நடந்த அகழாய்வில் இரு வண்ண பானைகள், பானை ஓடுகள், பாசிகள் உள்ளிட்டவை கண்டறியப்பட்டன. 5ஆம் கட்ட அகழாய்வில் கண்டறியப்பட்ட சுடுமண் குழாயின் தொடர்ச்சியை கண்டுபிடிப்பதற்காக தமிழக தொல்லியல் துறை மீண்டும் அதே பகுதியில் அகழாய்வை தொடங்கியது. அப்போது சுடுமண் குழாய் கண்டறியப்பட்ட இடத்தின் மேற்கு பகுதியில் 4 அடி ஆழத்தில் இரு அடுக்குகள் கொண்ட தரை தளம் தென்பட்டது.

ஏற்கனவே 5ஆம் கட்ட அகழாய்வின் போது கண்டறியப்பட்ட தரைதளத்தின் 10 அடி தொலைவிலேயே இந்த தரை தளமும் கண்டறியப்பட்டதால் அதன் தொடர்ச்சியாக இருக்க வாய்ப்பு உள்ளது என தொல்லியல் துறையினர் தெரிவித்துள்ளனர். 3 அடி தூரம் கொண்ட இந்த தரைத்தளம் செங்கல் கட்டுமானத்துடனும் களிமண் பூச்சுடனும் காணப்படுகிறது. தொடர்ந்து தரைதளத்தின் முழு பகுதியும் கிடைக்க வாய்ப்பு உள்ளது எனத் தொல்லியல் துறையினர் தெரிவித்துள்ளனர்.