வியாழன், 28 மே, 2020

கொரோனா தாக்கத்தால் புதிய வரவு செலவு திட்டத்தை தாக்கல் செய்ய வேண்டும் - ஸ்டாலின்

credit ns7
Image

கொரோனா பாதிப்பு காரணமாக தமிழக அரசின் மதிப்பீடுகளில் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளதால், புதிய வரவு செலவுத் திட்டத்தைத் தாக்கல் செய்ய வேண்டும் என எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
 
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: 

கொரோனா பேரிடர் காரணமாக தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்த 2020-21ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்ட மதிப்பீடுகள், மிகப் பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளதால், அவற்றை முற்றிலும் மாற்றியமைக்க வேண்டியுள்ளதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

கடன் சுமை அதிகரித்துள்ள நிலையில், மாநில அரசின் வரி வருவாய் ரூ.1.33 லட்சம் கோடி கிடைக்கும் என மதிப்பிடப்பட்டிருந்ததை சுட்டிக்கட்டியுள்ள மு.க.ஸ்டாலின், கொரோனா பாதிப்பு காரணமாக இந்த வருவாய் கிடைக்குமா என்பது கேள்விக்குறிதான் என குறிப்பிட்டுள்ளார். 

விவசாயிகள், தொழிலாளர்கள், அமைப்பு சாரா தொழிலாளர்கள் மற்றும் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் வருவாயை இழந்து தவித்து வரும் நிலையில், ஒவ்வொரு குடும்பத்திற்கும் உடனடி பண நிவாரணம் அளிப்பது முக்கியம் என்று அவர் கூறியுள்ளார். 

கொரோனா தொற்று நிதி நிலைமையை தலைகீழாக புரட்டிப் போட்டுள்ளதால், 2020-21-ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை, மறுபரிசீலனை செய்ய வேண்டிய சூழல் உருவாகியிருப்பதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

நிதி நிலைமையை சீரமைப்பது தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரங்கராஜன் தலைமையிலான குழுவிடம் இடைக்கால அறிக்கை கேட்கப்படாததால், 3 மாதங்களுக்குப் பின்னர் அளிக்கப்படும் அறிக்கையின் மீது நடவடிக்கை எடுக்க கால தாமதம் ஏற்படும் என குறிப்பிட்டுள்ளார்.

மாநிலத்தின் நிதி நிலைமைக்கு ஏற்பட்டுள்ள இந்த நெருக்கடியைக் கருத்தில் கொண்டும், பல தரப்பட்ட மக்களுக்கும் ஏற்பட்டுள்ள கடுமையான பாதிப்பினைக் கவனத்தில் வைத்தும், 2020-21-ம் ஆண்டிற்கான புதிய வரவு செலவுத் திட்டத்தைத் தமிழக அரசு தாக்கல் செய்ய வேண்டும் என எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.