வெள்ளி, 29 மே, 2020

கோவிட்– 19ஆல் ஏற்பட்ட பொருளாதார பிரச்னை; சமாளிக்க பிற நாடுகளை பின்பற்ற மறுக்கும் இந்தியா

ப.சிதம்பரம்,கட்டுரையாளர்
மே 12ம் தேதி பிரதமர் அறிவித்த, ரூ.20 லட்சம் கோடி நிதி தொகுப்பை நான் கடந்த வாரம் ஆராய்ந்து பார்த்தேன். நிதியமைச்சர் 5 பகுதிகளாக அறிவித்த அதன் விவரங்களை, பொருளாதார வல்லுனர்களும், ஆராய்ச்சியாளர்களும் ஆராய்ந்து பார்த்தனர். அதன் ஒருமித்த முடிவாக அந்த தொகுப்பின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 0.8 முதல் 1.3 சதவீதம் வரை நிதி தூண்டுதலாக உள்ளது. அதன் விரிவான விவரங்களுடன், நிதி தூண்டுதலின் அளவு, அதாவது 0.91 சதவீதத்திற்கு இணையான மொத்த உள்நாட்டு உற்பத்தியுடன் ரூ.1,86,650 கோடி இருக்க வேண்டும் என்று நான் கூறியிருந்தேன். இதற்கு யாரும் என்னுடன் முரண்படவில்லை.

உண்மையான பாவம்

இதுகுறித்து மேலும் விவாதிக்கும் முன், கோவிட் – 19ஆல் இந்தியா பாதிக்கப்பட்டபோது, இங்கிருந்த பொருளாதார சூழலை கவனிக்க விரும்புகிறேன். அதற்கு முன் ஏழு காலாண்டுகள் மொத்த உள்நாட்டு உற்பத்தி குறைந்து வந்தது. அது எதிர்பாராத ஒன்று. மார்ச் 11ம் தேதி, கோவிட்  19ஐ தீவிரமாக பரவி வரும் ஒரு தொற்றுநோய் என்று உலக சுகாதார நிறுவனம் அறிவித்தது. மோசமடைந்து வந்த பொருளாதார சூழலில் இருந்து நமது கவனம் கொரோனா வைரஸ் தொற்றின் மீது திரும்பியது. ஆனால், தற்போது இந்த அரசு பொருளாதார நெருக்கடிக்கு தொற்றுநோய் மீது பழி போட்டுவிட்டு, அது ஏற்கனவே வகுத்த கொள்கைகள் தவறாக வழிநடத்தியதை மறைத்துவிட்டது.

முதன்முதலாக ஊரடங்கு செய்தது தவிர்க்க முடியாதது. அதி தீவிரமாக பரவி வந்த வைரசை கட்டுப்படுத்த, அப்போது இருந்த ஒரே வழி சமூக இடைவெளியை கடைபிடிப்பது மட்டுமே. அதனால் ஊரடங்கும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. தொடர்ந்து முறையான கொள்கைகள் வகுக்காமலும், சரியான திட்டமிடலும் இல்லாததால், ஒன்றன்பின் ஒன்றாக அரசு ஊரடங்கை மட்டுமே செய்து வருகிறது. ஒவ்வொரு வெற்றிகரமான ஊரடங்கும் குறைவான பலனையே கொண்டுவந்தன. மற்றொருபுறம், அது பெரியளவில் மனிதம் தொடர்பான பிரச்னைகளை கொண்டு வந்தன.

முதல் ஊரடங்குக்கு பின், அரசின் ஒவ்வொரு முடிவும், முடிவுகளின் அடிப்படையில், கேள்வி கேட்கக்கூடியதாக இருந்தது. முதல் வாய்ப்பாக, மூன்றாவது ஊரடங்கிற்கு முதல்நாள், பிரதமர் புத்திசாலித்தனமாக, பின்வாங்கிக்கொண்டு, பிரச்னைகளை மாநில அரசுகளின் தலையில் கட்டினார். ஆனால், பொருளாதார கட்டுப்பாடுகள் மாநில அரசுகளின் கையில் இல்லை. முழு அதிகாரமும் மத்திய அரசிடமே உள்ளது. மத்திய அரசே மொத்த அதிகாரத்தையும் கொண்டுள்ளதாக இருக்கிறது. அனைத்து அதிகாரங்களையும் பிரதமர் அலுவலமே எடுத்துக்கொண்டது. நிதிக்காக மாநில அரசுகள் மத்திய அரசிடம் பிச்சை எடுக்க வேண்டிய நிலை உள்ளது. சட்ட உரிமைகளையும் மத்திய அரசே எடுத்துக்கொண்டது. தனியார் நிறுவனங்களிடம் இருந்து பெறப்படும் உதவி, தற்போது நன்மை கொடுத்தாலும், அது கடனை அதிகரிக்கும். இதனால் மாநில அரசுகளுக்கு பெருங்கடன் ஏற்படும். இந்த கடனை வழங்கும் நிறுவனங்களின் எந்த நிபந்தனைக்கும் அரசு கட்டுப்படவேண்டிய நிலை இருக்கும். நடப்பு நிதியாண்டில் இந்த கடனை திருப்பி செலுத்துவதும் சாத்தியமல்ல.

அச்சமூட்டும் பின்னடைவு

பொருளாதார மந்தநிலை அல்லது பின்னடைவு தற்போது நம்மை அச்சமூட்டி வருகிறது. இந்தியாவில், கடந்த 40 ஆண்டுகளில் எதிர்மறையான மொத்த உள்நாட்டு உற்பத்தி இருந்ததில்லை. அந்த பெருமை மோடி அரசையே சாரும். அவர்கள் தொற்றுநோயை காரணமாக்குவார்கள். ஆனால், மோடி அரசே உண்மையான குற்றவாளியாகும். பணமதிப்பிழப்பு செய்த 2016ம் ஆண்டு நவம்பர் 8ம் தேதி முதல் அவர்கள் செய்த பாவங்களின் எண்ணிக்கையை நாம் நினைவுகூறவேண்டிய அவசியம் இல்லை.

தொற்றுநோயை எதிர்த்து போராடுவதற்கு பிரதமர் மோடி, சீனா, இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ் மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகளின் வழிகளை பின்பற்றுகிறார். அவை முதலில் ஊரடங்கு, பின்னர் பரிசோதனை, தடமறிதல், தனிமைப்படுத்துதல் மற்றும் சிகிச்சையளித்தல் ஆகியவையாகும். மருத்துவ மற்றும் சுகாதார உட்கட்டமைப்பு வசதிகள் கூடுதலாக்குவது அவசியமாகும். இந்த நடவடிக்கைகளுக்கான பலன்கள் இடத்திற்கு இடம் வேறுபட்டு கலவையான ஒன்றாக உள்ளது. நம் நாட்டில் ஒரு தொற்று கூட இல்லாத சிக்கீமும் உள்ளது. 35 சதவீத தொற்று ஏற்பட்டுள்ள மஹாராஷ்ட்ராவும் உள்ளது. ஒரு குறிப்பிட்ட வழியில்தான் இந்த வைரஸ் செல்கிறது என்பதற்கான ஆதாரமும் நம்மிடமும் தெளிவாக இல்லை மற்றும் தெரியாத காரணிகளாலேயே தொற்று பரவுகிறது.

கோவிட்–19ஆல் ஏற்பட்ட பொருளாதார பிரச்னைகளை சமாளிக்க மற்ற நாடுகள் கடைபிடித்த வழிமுறைகளை பின்பற்ற மோடி மறுக்கிறார். அனைத்து பொருளாதார வல்லுனர்களுமே நிதி தூண்டுதல் ஒன்றை மட்டுமே சிறந்ததாக கருதுகின்றனர். அதாவது அதிகம் செலவிடும்போதுதான் பொருளாதாரம் வளரும் என்பது அதன் அர்த்தமாகும். 2020–21ம் ஆண்டிற்கான செலவு கணக்கு ரூ.30,42,230 கோடியாகும். வீழ்ந்து கொண்டிருக்கும் பொருளாதாரத்திற்கு இது போதுமான அளவு தொகையா என்பது முக்கியமான கேள்வி. ஆனால், சந்தேகமேயின்றி, பொருளாதாரம் எதிர்மறையான பாதையில் வேகமாக சென்றுகொண்டிருக்கும்போது இது பற்றாக்குறையான தொகைதான்.

நமக்கு ஒரு புதிய பட்ஜெட் தேவை. பிப்ரவர் 1ம் தேதி அன்று செய்த அனுமானங்கள் எல்லாம் பொருத்தமானதாக இருக்காது. வரும் ஜீன் 1ம் தேதி அன்று அரசு ஒரு புதிய பட்ஜெட்டை தாக்கல் செய்ய வேண்டும். அதில் மொத்த செலவு தொகை ரூ.40 லட்சம் கோடியாக இருக்க வேண்டும். தற்போது வருமானம் வரக்கூடியவற்றில் (வரி, வரியல்லாத, முதலீட்டு ரசீதுகள் ஆகியவை) இருந்து ரூ.18 லட்சம் கோடி மட்டுமே பெற முடியும். மீதித்தொகை நாம் கடனாகத்தான் பெற வேண்டும். முந்தைய பட்ஜெட்டில் பெறவேண்டிய கடனாக ரூ.7,96,337 கோடி இருந்தது. தற்போது ரூ.22 லட்சம் கோடிவரை கடனாக பெற வேண்டியிருக்கும்.

கடைசி வாய்ப்பு

கடன் வாங்குவது அல்லது நிதி பற்றாக்குறை கடினமான நிலையை எட்டினால், அது மற்ற பிரச்னைகள் ஏற்படுத்தும். அப்போது நாம் ஒரு பகுதி நிதி பற்றாக்குறையை, பணமாக்க தயங்கக்கூடாது. அதாவது பணத்தை அச்சடித்துக்கொள்ள வேண்டும். 2008/2009ம் ஆண்டுகளில் நிறைய நாடுகள் இதைப்பின்பற்றி தங்கள் பொருளாதார நிலை மேலும் பின்தங்கிவிடாமல் தக்கவைத்துக்கொண்டன.

இந்த மாற்றை, யோசிக்கவே பயங்கரமாக உள்ளது. இந்த பொருளாதார பின்னடைவால், பெரியளவில் வேலையிழப்பு ஏற்படும். ஏற்கனவே அது 24 சதவீதமாக உள்ளது. நீண்ட நாளாக வேலைக்காக காத்திருக்கும் இளைஞர்கள், கூலித்தொழிலாளர்கள், குறைந்த வருமானம் ஈட்டக்கூடியவர்கள் என அனைவரும் பாதிக்கப்பட்டு, குறைவான நுகர்வு, அதிக நோய்த்தன்மை மற்றும் ஏழ்மை ஆகியவை ஏற்படும்.

இந்தியா 2020ம் ஆண்டில் எப்படி இருந்தது என்பதை கற்பனை செய்து பார்த்தால், கடினமாக உழைத்து தங்களையும், தங்கள் குடும்பத்தினரையும் காப்பாற்றி, வறுமைகோட்டிற்கு மேல் வாழவைத்து வந்த புலம்பெயர் தொழிலாளிகளை, வேலை இழக்கச் செய்து, பணமின்றி, வீடின்றி, உணவின்றி, பல நூறு கிலோமீட்டர்கள் தங்கள் சொந்த கிராமங்களை நோக்கி நடக்க வைத்து, சில நேரங்களில் குழந்தைகளுடனும், வீடுகளுக்குச் செல்ல கட்டாயப்படுத்தியும், வீட்டிற்கு சென்றவுடன் சாக வேண்டிய நிலை ஏற்பட்டாலும், அவர்கள் இவ்வளவு துன்பத்திற்கும் ஆளாகியுள்ளதைதான் அது காட்டுகிறது.

மோடி அரசிற்கு ஒரு கடைசி வாய்ப்பு உள்ளது. அவர்கள் செலவு செய், கடன் வாங்கு, பணமாக்கு என்பதை செய்ய வேண்டும். இல்லாவிட்டால், இந்திய பொருளாதாரத்தை பத்தாண்டுகளுக்கு பின்தள்ளிய மோடியை மக்கள் மன்னிக்கவும் மாட்டார்கள். மறக்கவும் மாட்டார்கள்.

இக்கட்டுரையை எழுதியவர் ப.சிதம்பரம், முன்னாள் நிதியமைச்சர்.
credit 
https://tamil.indianexpress.com/opinion/p-chidambaram-covid-19-economic-package-finance-minister-nirmala-sitharaman-pm-modi-194592/

தமிழில்: R.பிரியதர்சினி.