சனி, 23 மே, 2020

தென் ஆப்பிரிக்காவில் 50,000 பேர் கொரோனாவால் உயிரிழக்கக்கூடும் - ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை!

ஆண்டின் இறுதிக்குள் தென் ஆப்பிரிக்காவில் கொரோனாவால் 50,000 பேர் உயிரிழக்கக்கூடும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆப்பிரிக்க கண்டத்திலேயே கொரோனாவால் அதிக பாதிப்பை சந்தித்துள்ள நாடாக இருப்பது தென் ஆப்பிரிக்கா. அங்கு இதுவரை 20,125 பேர் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 397 பேர் உயிரிழந்துள்ளனர்.
நோயை கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு 9வது வாரத்தை எட்டியுள்ளது. ஊரடங்கால் நோய்த்தொற்று பெருமளவில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ள நிலையில் அந்நாட்டு சுகாதார அமைச்சகத்தினால் பணியமர்த்தப்பட்டுள்ள ஆராய்ச்சியாளர்களும், கணக்கியலாளர்களும் அரசுக்கு அளித்துள்ள அறிக்கையில் வரும் நவம்பர் மாதத்திற்குள் 35,000 முதல் 50,000 பேர் வரை கொரோனாவால் உயிரிழக்கக்கூடும் என தெரிவித்துள்ளனர். 
மிக மோசமான சூழலாக 3 லட்சம் பேர் வரை தொற்றால் பாதிக்கப்படலாம் எனவும் எதிர்வரும் மழைக்காலம் நிலைமையை மோசமடையச் செய்யும் என வல்லுநர்கள் கணித்துள்ளனர்.
மேலும், ஊரடங்கு காரணமாக நோய் பரவல் 60% அளவுக்கு கட்டுப்பட்டு இருந்ததாகவும், மே மாத தொடக்கத்தில் தளர்வுகள் அளிக்கப்பட்ட பின்னர்  நோய் பரவல் அளவு 30% என்ற அளவுக்கு குறைந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.