கடந்த திங்கட்கிழமை நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியில், ஒளிபரப்பான கேள்வி நேரம் என்ற விவாத நிகழ்ச்சியில், கரூர் தொகுதியின் காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி கலந்து கொண்டார். எதிர் தரப்பான பாஜக-விலிருந்து கலந்துகொண்ட கரு நாகராஜன், நேரலையில் வைத்து ஜோதிமணியை இழிவாக குறிப்பிட்டார்.


மதச் சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் அறிக்கை
இதனால் கோபமான ஜோதிமணி, நாகராஜனுக்கு தனது கண்டனத்தை தெரிவித்து விட்டு, நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார். அவரைத் தொடர்ந்து, நிகழ்ச்சியில் கலந்து கொண்ட திமுக எம்.பி கலாநிதி வீராசாமியும், அந்த விவாத நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார். நேரலையில் ஒரு பெண் நாடாளுமன்ற உறுப்பினருக்கு நேர்ந்த அவமரியாதை, சமூக வலைதளங்களில் வைரலானது. குறிப்பாக ட்விட்டரில் ஜோதிமணிக்கு ஆதரவாக, ஹேஷ் டேக்கை ட்ரெண்ட் செய்தனர் நெட்டிசன்கள்.
"கழக தலைவர் @mkstalin அவர்கள் உத்தரவிற்கு இணங்க,பாஜகவினர் பங்கேற்கும் @news7tamil தொலைக்காட்சி விவாதங்களில் திமுக சார்பில் யாரும் பங்கேற்க மாட்டார்கள்"
- கழக செய்தித் தொடர்புச் செயலாளர் திரு. @Elangovantks MP அவர்கள் அறிக்கை.
Link: buff.ly/2WPheoF#தமிழின_காவலன்_திமுக
இதைப் பற்றி 340 பேர் பேசுகிறார்கள்
இந்நிலையில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியை சேர்ந்த, திமுக, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள், மதிமுக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, திராவிடர் கழகம், திராவிட இயக்க தமிழர் பேரவை, ஆகிய கட்சிகள் இணைந்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளன. அதில், “நியூஸ்7 தொலைக்காட்சி விவாதத்தில் பங்கேற்ற மக்களவை காங்கிரஸ் உறுப்பினர் ஜோதிமணி அவர்களை, இழிவு படுத்துகின்ற வகையில் பாஜகவை சேர்ந்த கரு நாகராஜன் பேசியதை, அநாகரீகத்தின் உச்சகட்டமாக கருதி, மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி, கட்சிகளின் சார்பாக வன்மையாக கண்டிக்கிறோம். அதேவேளையில் அவரை கண்டிக்கிற வகையில் நியூஸ்7 தொலைக்காட்சி செயல்படாததையும், வன்மையாக கண்டிக்கிறோம். எனவே பாஜக-வினர் பங்கேற்கும் நியூஸ் 7 தொலைக்காட்சி விவாதங்களில், மேலே குறிப்பிடப்பட்டுள்ள மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி, கட்சியை சேர்ந்தவர்கள் எவரும் பங்கேற்க மாட்டார்கள், என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்” என அறிவித்துள்ளனர்.