திங்கள், 25 மே, 2020

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்படாமல் தப்பிய ஒரே மாநிலம்!


இந்தியாவில் நாகாலாந்து மாநிலம் மற்றும் லட்சத்தீவில் இதுவரை ஒருவருக்கு கூட கொரோனா பாதிப்பு உறுதியாகவில்லை. 
உலகின் மூலை முடுக்குகளில் எல்லாம் பரவியுள்ள கொரோனா வைரஸின் தாக்கத்தில் இருந்து இந்தியாவின் ஒரு மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசம் தப்பித்துள்ளது வியப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் வடகிழக்கு மாநிலங்களில் குறைவான எண்ணிக்கையில் மட்டுமே கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. இந்நிலையில் நாகாலாந்து மாநிலத்தில் இதுவரை ஒருவருக்கு கூட கொரோனா தொற்று உறுதியாகவில்லை. இருப்பினும் அங்கு கொரோனா தடுப்பு தடுப்பு நடவடிக்கைகளில் மாநில அரசு தீவிரம் காட்டி வருகிறது. மாநில எல்லைகள் மூடப்பட்டுள்ளது மட்டுமல்லாமல், சொந்த ஊர் திரும்பாமல் மற்ற மாநிலங்களில் இருக்கும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு ரூ.10,000 உதவித்தொகை வழங்குவதாகவும் அறிவித்தது. 

புலம்பெயர் தொழிலாளர்கள் மூலம் கொரோனா பரவும் அச்சம் இருப்பதால் இந்த அறிவிப்பை வெளியிட்டது. இதன் மூலம் கொரோனா இல்லாத மாநிலமாக நாகாலாந்து திகழ்ந்து வருகிறது.அம்மாநிலத்தில் கடந்த ஏப்ரல் மாதம் திமாப்பூரை சேர்ந்த வணிகர் ஒருவர் கொரோனா அறிகுறிகளுடன் காணப்பட்டதாகவும், அவர் உடனடியாக அசாம் மாநிலம் கவுகாத்தி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டதாகவும் தகவல் வெளியானது. அந்த நபருக்கும் அசாமில் சிகிச்சை அளிக்கப்பட்டதால், நாகாலாந்து கொரோனா தொற்று இல்லாமல் தொடர்ந்து இருந்து வருகிறது.
இதற்கு முன்னதாக சிக்கிம் மாநிலமும் இந்த பட்டியலில் இருந்த நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு அங்கு ஒரு நபருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதே போல் யூனியன் பிரதேசமாக லட்சத்தீவிலும் இதுவரை யாருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை. 
வடகிழக்கு மாநிலங்களான அசாமில் 378 பேருக்கும், திரிபுராவில் 191 பேருக்கும், மணிப்பூரில் 32 பேருக்கும், மேகாலயாவில் 14 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது