இங்கிலாந்தை சேர்ந்த பிரபல விமான எஞ்சின் தயாரிப்பு நிறுவனமான ரோல்ஸ் ராய்ஸ், குறைந்தது 9,000 ஊழியர்களை பணிநீக்கம் முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளது.
இங்கிலாந்தை சேர்ந்த பிரபல எஞ்சின் தயாரிப்பு நிறுவனமான ரோல்ஸ் ராய்ஸ், போயிங் 787 மற்றும் ஏர்பஸ் A350 உள்ளிட்டவைகளுக்கு எஞ்சின் தயாரித்து வருகிறது. ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் பெரும்பாலான வருவாய் விமான போக்குவரத்தை நம்பியே உள்ளது. இந்நிலையில் கொரோனா பாதிப்பால் உலகம் முழுவதும் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. அதனால் விமான போக்குவரத்து நிறுவனங்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன. நாடுகளுக்கு இடையே விமான போக்குவரத்து தொடங்குவதற்கு இன்னும் சில மாதங்கள் ஆகலாம் என கூறப்படுகிறது.
அதனால் ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தில் பணிபுரியும் சுமார் 52,000 ஊழியர்களில் குறைந்தது 9,000 பேர் வேலையை இழக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அதாவது மொத்த ஊழியர்களில் 5ல் 1 பகுதியினர் பணிநீக்கம் செய்யப்பட வாய்ப்புள்ளது. கொரோனா தொற்றால் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை சமாளிப்பதற்காக எடுக்கப்பட்டுள்ள இந்த முடிவால் ஆண்டுக்கு சுமார் 1.6 பில்லியன் டாலர்கள்( இந்திய மதிப்பில் சுமார் ரூ.12,111 கோடிக்கும் மேல்) சேமிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மறுசீரமைப்பு பணிகளுக்கு அதிக அளவில் செலவாகும் என்றும் கூறியுள்ளது.
இதுதொடர்பாக தலைமை நிர்வாகி வாரன் ஈஸ்ட் கூறுகையில், ‘இது மிகவும் நெருக்கடியான சூழல். இதனை நாம் எதிர்கொண்டு ஆக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். அதனால் பொருளாதார பிரச்னையை சமாளிக்க இதுபோன்ற முடிவுகளை எடுக்க வேண்டியுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வந்த பிறகு மேற்கொள்ளப்படும் மறுசீரமைப்பு நடவடிக்கைகளால் விமான போக்குவரத்து பாதிக்கப்படும் என்றும், வணிக நிறுவனங்களுக்கு பெரிய அளவில் பாதிப்பு இல்லை. அதனால் 9,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய ரோல்ஸ் ராய்ஸ் முடிவெடுத்துள்ளது’என்றும் அவர் கூறியுள்ளார்.
credit ns7