தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக 19 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மதுரை, திருச்சி, கரூர், ஈரோடு, வேலூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களிலும், திருத்தணியிலும் வெப்பநிலை அதிரித்து அனல்காற்று வீசக்கூடும், என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸ் முதல், 42 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் என்பதால், அடுத்த 2 நாட்களுக்கு, காலை 11 மணி 30 நிமிடங்களில் இருந்து பிற்பகல் 3 மணி 30 நிமிடங்கள் வரை, விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் திறந்த வெளியில் செல்வதை தவிர்க்குமாறும், வானிலை மையம் அறிவுறுத்திவுள்ளது.
வெப்பச்சலனம் காரணமாக கோவை, நீலகிரி, கிருஷ்ணகிரி, தேனி, கன்னியாகுமரி உள்ளிட்ட 19 மாவட்டங்களில், மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. விருதுநகர், ராமநாதபுரம், தென்காசி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் பலத்த காற்று மற்றும் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
சென்னையை பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், அதிகபட்சமாக 37 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகும் எனவும், வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.