டெல்லி திஹார் சிறையில் உதவி கண்காணிப்பாளர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் இதுவரை 1,38,845 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ள நிலையில், 4,021 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில், டெல்லி திஹார் சிறையில் உதவி கண்காணிப்பாளராக இருக்கும் சேத் ராம் மீனா என்பவருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அவருக்கு அறிகுறிகள் எதுவும் காணப்படவில்லை என்றும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பரிசோதனை மேற்கொண்ட போது தொற்று கண்டறியப்பட்டதாக சிறை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அவருடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறியும் பணி முடிந்து விட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், வீட்டுக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
திஹார் சிறை ஊழியர்களுக்கான குடியிருப்பு வளாகத்தில் சேத் ராம் தங்கியிருந்ததாகவும், அவரது அக்கம்பக்கத்தினர் 9 பேரை தனிமைப்படுத்தியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர். சிறையில் அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
இதுவரை ரோஹினி சிறையில் 18 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதே போல மந்தோலி சிறைச்சாலையில் உதவி கண்காணிப்பாளர் ஒருவருக்கு கடந்த வாரம் கொரோனா உறுதி செய்யப்பட்டது நினைவுகூறத்தக்கது.