ஞாயிறு, 31 மே, 2020

தமிழகத்தில் பஸ்கள் இயக்கம், இ-பாஸ் தேவையில்லை

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக மாநில பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழும், மத்திய உள்துறை அமைச்சகத்தின் அறிக்கையின் அடிப்படையிலும், தற்போதுள்ள ஊரடங்கு உத்தரவு 30.6.2020 நள்ளிரவு 12 மணி வரை நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு இன்று அறிவித்தது

இந்த நீட்டிப்பு காலத்தில், சில மனடலங்களைத் தவிர்த்து பொதுப் போக்குவரத்து நாளை  (ஜூன் 1ம்) முதல்  இயங்க தமிழக அரசு அனுமதியளித்துள்ளது. இதன்படி, மாநிலத்தில் பொது பேருந்து போக்குவரத்து 8 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. முதல் கட்டமாக மண்டலத்திற்குள் மட்டும் பொதுப் போக்குவரத்து இயக்கப்படும். மண்டலத்திற்குள் பயணிக்கும் பயணிகளுக்கு இ-பாஸ் தேவையில்லை என்ற நிலையில், பொதுப் போக்குவரத்து பேருந்துகளில் பயணிக்கவும் இ-பாஸ் அவசியமில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  இருப்பினும்,  மண்டலங்களுக்கு இடையே பஸ் போக்குவரத்து இருக்காது. தனியார் வாகனத்தில் பயணிக்க விரும்புபவர்கள், வழக்கம் போல இ பாஸ் பெற்று பயணிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், வெளி மாநிலங்களுக்கு சென்று வரவும், வெளி மாநிலங்கலிருந்து தமிழ்நாட்டுக்கு வரவும் இ- பாஸ் முறை தொடர்ந்து நடைமுறையில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

எட்டு மண்டலங்கள் :

 

மண்டலம் I: கோவை, நீலகிரி, ஈரோடு, திருப்பூர், கரூர், சேலம் மற்றும்  நாமக்கல்.

மண்டலம் II: தர்மபுரி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மற்றும் கிருஷ்ணகிரி.

மண்டலம் III: விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர் மற்றும்  கள்ளக்குறிச்சி

மண்டலம் IV: நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி,அரியலூர், பெரம்பலூர் மற்றும் புதுக்கோட்டை.

மண்டலம் V: திண்டுக்கல், மதுரை, தேனி, விருதுநகர், சிவகங்கை மற்றும் ராமநாதபுரம்.

மண்டலம் VI: தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும்  தென்காசி

மண்டலம் VII: காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும்  திருவள்ளூர்.

மண்டலம் VIII: சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகள்.

மண்டலம் VII-ல் உள்ள  செங்கல்பட்டு, திருவள்ளூர்,காஞ்சிபுரம் மாவட்டங்கள் மற்றும் எட்டாவது மண்டலம் VIII-ல் உள்ள  சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகள் தவிர்த்து,  அனைத்து மண்டலங்குக்குள்  50 விழுக்காடு பேருந்துகள் மட்டும் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.