வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்ட திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதிக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த பிப்ரவரி மாதம் 14ம் தேதி கலைஞர் வாசகர் வட்டம் சார்பில், நடத்தப்பட்ட கருத்தரங்கில், பட்டியலினத்தவருக்கு எதிராக சர்ச்சைக்குரிய வகையில் ஆர்.எஸ் பாரதி பேசியதாக சமூக வலைதளங்களில் செய்தி பரவியது. இதுதொடர்பாக ஆதி தமிழர் மக்கள் கட்சி தலைவர் கல்யாண சுந்தரம் அளித்த புகாரின் அடிப்படையில், தேனாம்பேட்டை காவல்நிலையத்தில் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கை ரத்து செய்ய கோரி ஆர்.எஸ் பாரதி தாக்கல் செய்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் ஆர்.எஸ் பாரதி இன்று காலை காவல்துறையால் கைது செய்யப்பட்டு, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி செல்வகுமார் வீட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.
அப்போது ஆர்.எஸ் பாரதி தரப்பில், பிப்ரவரியில் நடந்த சம்பவம் தொடர்பாக தற்போது கைது செய்துள்ளனர். கருத்தரங்கில் பேசிய விவரங்களை முழுமையாக கேட்காமல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. வழக்கை ரத்து செய்ய கோரிய மனு உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது எனவும் வாதிடப்பட்டது. மேலும், அவரை நீதிமன்ற காவலில் வைக்க கூடாது எனவும், ஜாமீன் வழங்க வேண்டும் எனவும் கோரப்பட்டது.
அரசுத்தரப்பில், அவரை நீதிமன்ற காவலில் வைக்க வேண்டும் என வாதிடப்பட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, ஆர்.எஸ் பாரதிக்கு மே 31ம் தேதி வரை இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். மேலும், ஜூன் 1ம் தேதிக்குள் நீதிமன்றத்திற்கு நேரில் சென்று ஜாமீன் பெற்று கொள்ளலாம் எனவும் நீதிபதி செல்வகுமார் உத்தரவிட்டார்.
credit ns7